Skip to main content

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பேசிய விமானப்படை தளபதி பதாரியா!

Oct 09, 2020 250 views Posted By : YarlSri TV
Image

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பேசிய விமானப்படை தளபதி பதாரியா! 

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போர் விமானங்களின் வீரசாகசம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க செய்தது. விழாவில் பேசிய விமானப்படை தளபதி பதாரியா, “நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க தயாராக இருப்பதாக” உறுதி கூறினார்.



நாட்டின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிற இந்திய விமானப்படை, 1932-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 8-ம் நாள் தொடங்கப்பட்டது.



இந்திய விமானப்படை தொடங்கியதின் 88-வது ஆண்டு தினத்தையொட்டி விமானப்படையினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.



பிரதமர் மோடி தனது வாழ்த்துச்செய்தியில், “விமானப்படை தினத்தையொட்டி, இந்திய விமானப்படை வீரர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். நீங்கள் நமது வான்வெளியை பாதுகாப்பது மட்டுமல்லாமல், பேரழிவு காலங்களில் மனித குலத்துக்கு சேவையாற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். நமது தாய்நாட்டுக்கான உங்கள் துணிச்சல், வீரம், அர்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகம் தருகிறது” என கூறி இருந்தார்.



விமானப்படை தினத்தையொட்டி, உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தின் ஹிண்டன் விமானதளத்தில் நேற்று கோலாகல கொண்டாட்டம் நடைபெற்றது. இங்கு விமானப்படையினர் நடத்திய கண்கவர் அணிவகுப்பை விமானப்படை தளபதி ராகேஷ் குமார்சிங் பதாரியா பார்வையிட்டார்.



இந்த கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம்.நரவனே, கடற்படை தளபதி கரம்பீர் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.



இந்த கொண்டாட்டத்தில் இந்தியாவின் பழமையான போர் விமானங்கள் தொடங்கி நவீன ரபேல் போர் விமானங்கள் வரையில் எண்ணற்ற போர் விமானங்கள் வானில் அணிவகுத்து சென்று வீர சாகசங்களை நடத்திக்காட்டின.



ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்களை பரவசப்படுத்தின.



இந்த விழாவில் விமானப்படை தளபதி ராகேஷ் குமார்சிங் பதாரியா பேசும்போது கூறியதாவது:-



நாங்கள் 89-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த தருணத்தில் இந்திய விமானப்படையானது, ஒரு பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது. நாங்கள் புதிய சகாப்தத்துக்குள் நுழைகிறோம்.



இந்த ஆண்டு உண்மையில் முன்னோடி இல்லாதது ஆகும். ஏனென்றால் கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. இதற்கு நமது நாடு உறுதியுடன் பதில் அளித்து வருகிறது.



எங்கள் விமானப்படை வீரர்களின் உறுதி, இந்த கால கட்டத்தில் முழு அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திறனை இந்திய விமானப்படை தக்க வைத்துக்கொண்டிருப்பதை உறுதி செய்தது.



சமீபத்திய வடக்கு எல்லை மோதல்களில், நமது வீரர்கள் குறுகிய அழைப்பில், திறம்பட பணியாற்றியதை நான் பாராட்டுகிறேன்.



நாங்கள் எங்கள் உறுதியையும், செயல்பாட்டு திறனையும், எதிரிக்கு தெளிவாக நிரூபித்து காட்டி உள்ளோம்.



அண்மையில் விமானப்படையில் அதிநவீன ரபேல் விமானம், சினூக்கு, அப்பாச்சி ஹெலிகாப்டர்களின் சேர்க்கை, போர்க்களத்தில் நமது போர்த்திறனை கணிசமாக அதிகரித்துள்ளது.



நாட்டின் இறையாண்மையையும், நலன்களையும் பாதுகாக்க விமானப்படை எப்போதும் தயார் நிலையில் உள்ளது.



இவ்வாறு அவர் கூறினார்.



புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பயணம்செய்த வாகனங்கள் மீது பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 46 படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.



இதற்கு பதிலடி கொடுக்கிற வகையில் அடுத்த 12 நாளில் (பிப்ரவரி 26) இந்திய போர் விமானங்கள் எல்லை தாண்டிச்சென்று, பாலகோட்டில் அமைந்திருந்த பயங்கரவாதிகள் முகாம்களை துவம்சம் செய்து, பயங்கரவாதிகளை கொன்று குவித்தன.



இந்த தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த விமானப்படை வீரர்களான படைத்தலைவர் மிண்டி அகர்வால், குழு கேப்டன்கள் ஹன்சல் செக்வேரா, ஹேமந்த் குமார் வத்ஸ்ரா ஆகியோருக்கு ‘யூத் சேவா’ பதக்கங்களை விமானப்படை நேற்று வழங்கி சிறப்பித்தது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை