Skip to main content

முதல்-அமைச்சர் ஆக்க காங்கிரஸ் பக்க பலமாக இருக்கும் - தினேஷ் குண்டுராவ்

Sep 26, 2020 292 views Posted By : YarlSri TV
Image

முதல்-அமைச்சர் ஆக்க காங்கிரஸ் பக்க பலமாக இருக்கும் - தினேஷ் குண்டுராவ்  

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை புதிதாக நியமிக்கப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நேற்று சந்தித்து பேசினார்.



இந்த சந்திப்பின்போது தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா ஆகியோர் உடன் இருந்தனர்.



சந்திப்பு முடிந்த பின், செய்தியாளர்களை சந்தித்த தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:-



கூட்டணி கட்சியின் தலைவர் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக மு.க.ஸ்டாலினை சந்தித்தேன். இந்த சந்திப்பு மிகவும் நல்ல சந்திப்பாக இருந்தது. தமிழகத்தில் தி.மு.க.வும், காங்கிரசும் இணைந்து சிறப்பாக செயல்படுகின்றன. வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற காங்கிரஸ் கடுமையாக பாடுபடும்.



கட்சியை பலப்படுத்துவதுடன் கூட்டணியையும் பலப்படுத்துவோம். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வெற்றியடைய செய்து, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக ஆக்குவோம். அதற்கு காங்கிரஸ் கட்சி பக்க பலமாக இருக்கும்.



மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டத்துக்கு எதிராக 28-ந் தேதி நடைபெற உள்ள போராட்டத்தில் காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் கலந்து கொள்ளும்.



கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக விவாதிக்கவில்லை. வருகிற அக்டோபர் 2-ந் தேதி கன்னியாகுமரி செல்ல உள்ளேன். அங்கு நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்ட பின் இடைத்தேர்தலை சந்திப்பது குறித்து தெரிவிக்கப்படும்.



இவ்வாறு அவர் கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை