Skip to main content

ஐக்கிய அரபு அமீரகம் - இஸ்ரேல் - பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!

Sep 16, 2020 282 views Posted By : YarlSri TV
Image

ஐக்கிய அரபு அமீரகம் - இஸ்ரேல் - பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! 

1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 



குறிப்பாக அரபு நாடுகளான எகிப்து,ஜெர்டான்,லெபனான்,ஈராக், சிரியா, பாலஸ்தீனமும் இஸ்ரேலுக்கு எதிராக போரில் ஈடுபட்டன. இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. ஆனாலும், இஸ்ரேல் உடனான மோதல் போக்கு அதிகரித்து வந்தது.



அரபு நாடுகள் இஸ்ரேல் உடனான ராஜாங்கம், வர்த்தகம் உள்பட அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்தன. இஸ்ரேலை ஒரு தனி நாடாக அரபு நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால்,1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன.



இதற்கிடையில், வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகமும் இஸ்ரேலை ஒரு தனிநாடாக ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது.



இஸ்ரேலை தனிநாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காதால் இஸ்ரேல் பாஸ்போர்டை வைத்திருப்பவர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய ஐக்கிய அரபு அமீரகம் தடைவிதித்திருந்தது. இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே நேரடி விமானப்போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.



இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உள்பட எந்த வித உறவுகளும் இல்லாமல் இருந்தது. 



பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஐக்கிய அரபு அமீரகம்-இஸ்ரேல் இடையேயான மோதல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் முயற்சியால் முடிவுக்கு வந்தது.இரு நாடுகளும் இடையேயும் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டது.



இதன் மூலம் ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட அரபு நாடு என்ற பட்டியலில் அமீரகம் இணைந்துள்ளது. வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு அமீரகம் தான்.



இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேலை தனிநாடாக அமீரகம் அங்கீகரித்தது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயும் நேரடி விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது.



இரு நாடுகளுக்கு இடையேயும் தூதரக உறவுகளை மேற்கொள்ளவும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வு டிரம்ப் நிர்வாகத்தின் மிகப்பெரிய வெற்றியாக கருத்தப்பட்டது.



ஐக்கிய அரபு அமீரகம் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டதையடுத்து தனது நாட்டின் வான் எல்லைப்பரப்பு வழியாக இஸ்ரேல்-அமீரகம் இடையேயான விமான போக்குவரத்து நடைபெற சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைன் நாடுகள் அனுமதி அளித்தன.



இதனால், சவுதி மற்றும் பஹ்ரைனும் இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கைமேற்கொள்ளலாம் என கருத்துக்கள் நிலவி வந்தன. 



இதையடுத்து, சில நாட்களில் இஸ்ரேலை அங்கீகரித்து அந்நாட்டுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள பஹ்ரைன் நாடு சம்மதம் தெரிவித்தது. மேலும், இஸ்ரேலில் தூதரகம் திறக்கவும், இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவை வலுப்படுத்தம் உடன்படிக்கை செய்யப்பட்டது.



ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய அரபு வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தது மத்திய கிழக்கு அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் - இஸ்ரேல் - பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள அமைதி உடன்படிக்கை நேற்று (செப்டம்பர் 15) அமெரிக்காவில் கையெழுத்தானது.



அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் வெள்ளைமாளிகையில் வைத்து இந்த வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. 



ஆபிரகாம் உடன்படிக்கை என பெயரிடப்பட்டுள்ள இந்த அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசரும், வெளியுறவுத்துறை மந்திரியுமான ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அப்துல்லாதீப் அல் சயானி ஆகியோர் கூட்டாக கையெழுத்திட்டனர்.



இதன் மூலம் பல ஆண்டுகளாக நிலவி வரும் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையேயான மோதலில் பதற்றம் தணிந்து அமைதி திரும்பும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.



இந்த ஆபிரகாம் உடன்படிக்கையின் மூலம் எகிப்து (1979), ஜோர்டான் (1994) ஆகிய நாடுகளை தொடர்ந்து இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கை செய்துகொண்ட அரபு நாடுகள் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் (2020) மற்றும் பஹ்ரைன் (2020) இணைந்துள்ளது. இதனால் இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டுள்ள அரபு நாடுகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை