Skip to main content

பரபரப்பான சூழ்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது!

Sep 14, 2020 234 views Posted By : YarlSri TV
Image

பரபரப்பான சூழ்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது! 

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதால் பிரதமர் மோடி கடந்த மார்ச் மாதம், நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார்



அவர் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு சில தினங்களுக்கு முன் நாடாளுமன்ற கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.



நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் நோய்த் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.



இதற்கிடையே லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீற முயன்றது. அதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அங்கு ஏற்பட்ட பதற்றம் இன்னும் தீரவில்லை.



கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறியதால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டதாகவும், லடாக் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தோல்வி அடைந்து விட்டதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.



இந்த பரபரப்பான சூழ்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை இன்று முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மொத்தம் 18 நாட்கள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் கொரோனா பிரச்சினை, லடாக் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டுகின்றன.



முதல் நாளான இன்று மக்களவை கூட்டம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும்.



மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு உள்ளனர். நாட்டில் பெருந்தொற்று பரவல் தீவிரமாக இருந்து வரும் நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற இருப்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து எம்.பி.க்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது.



எனவே ஆர்.டி.-பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இதேபோல் நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் ஆகும். எம்.பி.க்கள் மொபைல் செயலி மூலம் தங்கள் வருகையை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.



கூட்டம் நடத்துவதற்காக இருசபைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. மக்களவை மண்டபத்தில் 257 உறுப்பினர்களும், பார்வையாளர்கள் மாடத்தில் 172 உறுப்பினர்களும் அமர வைக்கப்படுவார்கள்.



இதேபோல் மாநிலங்களவை மண்டபத்தில் 60 உறுப்பினர்களும், பார்வையாளர்கள் மாடத்தில் 51 உறுப்பினர்களும் அமர வைக்கப்படுவார்கள். இவர்கள் கேமரா மூலம் சபாநாயகரிடம் பேசுவார்கள். பெஞ்சுகளுக்கு இடையே எளிதில் பார்க்கக்கூடிய தகடுகள் வைக்கப்பட்டு, சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மருத்துவ பரிசோதனைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தியுடன் வெளிநாடு சென்று உள்ளார். அவர்கள் எப்போது கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.



வழக்கமாக பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர் சபாநாயகர் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்துவார். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்போது அந்த கூட்டம் நடைபெறவில்லை.



சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நேற்று மக்களவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. பாராளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் உள்ள பிரதான கமிட்டி அறையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, அர்ஜூன் ராம் மேக்வால் (பா.ஜனதா), ஆதிர் ரஞ்சன் சவுத்ரி (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (தி.மு.க.), அசாதுதீன் ஒவைசி (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கேள்வி நேரம், பின்னர் அது முடிந்ததும் பிரச்சினைகள் எழுப்பப்படும் நேரம் (நேரமில்லா நேரம்) ஆகியவற்றை ரத்து செய்ய ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது பற்றி அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



கூட்டம் நடந்த தகவலை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள மந்திரி பிரகலாத் ஜோஷி, மக்களவையில் விவாதிக்கப்படவேண்டிய விஷயங்கள், நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக குறிப்பிட்டு உள்ளார்.



கூட்டம் முடிந்த பின் சபாநாயகர் ஓம் பிர்லா நிருபர்களிடம் பேசுகையில், பாராளுமன்ற கூட்டம் சுமுகமாக நடைபெற ஆதரவு அளிப்பதாக அனைத்துக்கட்சி தலைவர்களும் உறுதி அளித்து இருப்பதாக கூறினார்.



கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கூறுகையில், பொருளாதார மந்தநிலை, வேலையில்லா திண்டாட்டம், லடாக் எல்லையில் பதற்றம், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. வருவாய் பாக்கி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.



முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜெய்ராம் ரமேஷ் நேற்று காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-



பாராளுமன்றத்தில் ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகள் இணைந்து செயல்படுவது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால் ஆகியோரும், நானும் மற்ற கட்சிகளின் தலைவர்களுடன் பேசி வருகிறோம்.



லடாக் எல்லை பிரச்சினை, நாட்டின் பொருளாதார நிலைமை, கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் நிலைமை, விமானநிலையங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.



இதுகுறித்து பேச சபையில் எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று நம்புகிறோம். இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கிறோம்.



அவசர சட்டங்களுக்கு மாற்றாக 11 மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் கொண்டு வந்து நிறைவேற்ற மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. இதில் வங்கி ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா மற்றும் வேளாண்மை தொடர்பான 3 மசோதாக்களை எதிர்ப்பது என்று காங்கிரசும், மற்ற எதிர்க்கட்சிகளும் முடிவு செய்து உள்ளன.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை