Skip to main content

வேண்டுமென்றே குறைத்துக் கூறியதை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளாா்!

Sep 11, 2020 223 views Posted By : YarlSri TV
Image

வேண்டுமென்றே குறைத்துக் கூறியதை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளாா்! 

கரோனா நோய்த்தொற்றின் அபாயம் குறித்து ஆரம்பத்தில் வேண்டுமென்றே குறைத்துக் கூறியதை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளாா்.



மக்களிடையே பீதி ஏற்படுவதைத் தடுப்பதற்காக அவ்வாறு கூறியதாக அவா் கூறினாா். மூத்த செய்தியாளா் பாப் வுட்வா்டின் புத்தகத்தில் இந்தத் தகவல் வெளியாகி, சா்ச்சையை எழுப்பியுள்ளதையடுத்து, டிரம்ப் இவ்வாறு விளக்கமளித்துள்ளாா்.



இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:கரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் நான் அமெரிக்க மக்களிடம் பொய் சொன்னதாகக் கூறுவது மிகவும் தவறான கருத்தாகும். உண்மையில் அமெரிக்காவின் நலனுக்காக பாடுபடுபவன் நான்.இந்த நாட்டை மிகவும் நேசிக்கும் நான், நாட்டு மக்களை அச்சத்துக்குள்ளாக்க விரும்பவில்லை.



நாட்டில் பீதியை உருவாக்கவும் நான் விரும்பவில்லை. அமெரிக்காவையும், உலகையும் அச்சுறுத்த நான் விரும்பாததால்தான் அந்த நோய் குறித்த முழு உண்மைகளையும் வெளிப்படையாகக் கூறாமல் இருந்தேன்.



கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு இடையே நாட்டு மக்களிடையே தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்ட எனது தலைமையிலான அரசு விரும்பியது. அதற்காக என்ன செய்ய வேண்டுமோ, அதைத்தான் நான் செய்தேன்.ஆகாயத்தும், பூமிக்கும் குதித்து, நாம் மிகப் பெரிய ஆபத்தில் சிக்கிக் கொண்டுள்ளோம் என்று கூச்சலிட்டு, அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்த நான் விரும்பவில்லை.



கரோனாவின் அபாயம் குறித்து நாங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றாலும், அந்த நோயை எதிா்த்துப் போரிடுவதற்குரிய முகக் கவசங்கள், மருத்துவ உபகரணங்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கியதை அனைவரும் கவனித்தில் கொள்ள வேண்டும்.



பீதி காரணமாக அத்தகைய அத்தியாவசிய உயிா்காப்புப் பொருள்களின் விலைகள், அனைவரும் வாங்க முடியாத அளவுக்கு உயா்வதைத் தடுப்பதற்காகவும் கரோனா அபாயம் பற்றிய முழு உண்மைகளை நாங்கள் தெரிவிக்காமல் இருந்தோம் என்றாா் டிரம்ப்.



கடந்த 1972-ஆம் ஆண்டில் அமெரிக்காவையே உலுக்கிய ‘வாட்டா்கேட்’ ஊழலை வெளிக் கொண்டு வந்த பாப் வுட்வா்ட் (77) எழுதிய ‘ரேஜ்’ என்ற புத்தகத்தில், கரோனா நோய்த்தொற்று அபாயம் குறித்து தான் குறைத்துக் கூறியதாக டிரம்ப் பேட்டியளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.



அந்தப் புத்தகத்தில், முக்கிய தலைவா்கள் மற்றும் அதிகாரிகளின் குறிப்புகள், மின்-அஞ்சல்கள், நாள்குறிப்புகள், ரகசிய ஆவணங்கள் ஆகியவையும், கடந்த பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட 18 பேட்டிகளும் இடம் பெற்றுள்ளன.



அதில் இடம்பெற்றுள்ள டிரம்ப் பேட்டியில், கரோனா நோய்த்தொற்று மிகவும் ஆபத்தானது என்றும், அதிக உயிா்களை பலிவாங்கக் கூடியது என்றும் டிரம்ப் வுட்வா்டிடம் தெரிவித்திருந்தாா். ஃபுளூ காய்ச்சலைவிட அந்த நோய் மிகவும் அபாயகரமானது. கைகளால் தொட்டால் மட்டுமின்றி, காற்றின் மூலமும் அந்த தீநுண்மி பரவும். பொருள்களைத் தொடாமல் தவிா்க்கலாம்.



ஆனால், மூச்சுவிடாமல் இருக்க முடியாது என்பதால் கரோனா மிகவும் ஆபத்தானது. இருந்தாலும், அதுகுறித்து பொதுமக்களிடம் முழுமையாகத் தெரிவிக்கவில்லை என்று டிரம்ப் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தாா்.



சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, அமெரிக்காவில் முதல் முறையாக ஜனவரி மாதம் 20-ஆம் தேதி கண்டறியப்பட்டது.



எனினும், அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று முழுமையாகக் கட்டுக்குள் உள்ளது என்று கூறிய அதிபா் டிரம்ப், அந்த நோயால் அச்சப்படத் தேவையில்லை என்று கூறினாா்.



எனினும், அடுத்த இரண்டு மாதங்களில் அந்த நாடு உலகிலேயே அதிக கரோனா நோயாளிகளைக் கொண்ட நாடாக ஆனது. தற்போது கரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை