Skip to main content

எட்டு மாதங்களில், தி.மு.க., ஆளும் கட்சியாகி விடும்,' என, அக்கட்சியின் தலைவர், ஸ்டாலின் பேசினார்!

Sep 10, 2020 255 views Posted By : YarlSri TV
Image

எட்டு மாதங்களில், தி.மு.க., ஆளும் கட்சியாகி விடும்,' என, அக்கட்சியின் தலைவர், ஸ்டாலின் பேசினார்! 

இன்னும், எட்டு மாதங்களில், தி.மு.க., ஆளும் கட்சியாகி விடும்,'' என, அக்கட்சியின் தலைவர், ஸ்டாலின் பேசினார்.



தி.மு.க., பொதுக்குழு கூட்டம், ஸ்டாலின் தலைமையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று நடந்தது. இதில், 3,500 பேர் பங்கேற்றனர். தி.மு.க.,வின், ௪வது பொதுச்செயலராக துரைமுருகனும், ௮வது பொருளாளராக டி.ஆர்.பாலுவும், ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



ஏற்கனவே இருந்த பொதுச்செயலர் அன்பழகன் மறைவுக்கு பின், பொதுச்செயலருக்கான அதிகாரம், ஸ்டாலினிடம் மாற்றப்பட்டது. தற்போது, புதிய பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகனுக்கு, மீண்டும் பொதுச்செயலருக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, பொதுக்குழுவில் ஸ்டாலின் வெளியிட்டார்.



இதுதொடர்பாக, தி.மு.க., சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.ஏற்கனவே, துணை பொதுச்செயலராக ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் உள்ளனர். சட்ட விதிகளை மாற்றி, கூடுதலாக, இரு துணை பொதுச்செயலர்களாக, பொன்முடி, ஆ.ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனால், தற்போது, துணை பொதுச்செயலர்களின் எண்ணிக்கை, ஐந்தாக உயர்ந்துள்ளது.துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, ஆ.ராஜா ஆகிய நால்வருக்கும், ஸ்டாலின் பட்டு வேட்டி, சால்வை அணிவித்து, வாழ்த்தி பேசினார்.



தீர்மானம்



விவசாயிகள் விரோத கொள்கைகளை, மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்பது உட்பட, ௧௨ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தி.மு.க., - எம்.பி., தயாநிதி பேசுகையில், ''தி.மு.க., வரலாற்றில் முதல் முறையாக, தலைமை பொறுப்புக்கு, நான்கு எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்,'' என்றார்.இளைஞர் அணி செயலர் உதயநிதி பேசுகையில், ''சட்டசபை தேர்தலில், இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.

மகளிர் அணி செயலர் கனிமொழி பேசுகையில், ''எதிர்கால தலைமுறையை பாதுகாப்பதற்கு, மத்திய அரசை எதிர்த்து பேச, யாருமே துணியாத நேரத்தில், முதல் குரலாக, ஸ்டாலின் குரல் தான் ஒலிக்கிறது,'' என்றார்.



துரைமுருகன் பேசுகையில், ''கருணாநிதியிடம் இருந்தது போல, வாழ்நாள் முழுவதும், ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருப்பேன். இது, சத்தியம்,'' என்றார், உருக்கமாக.ஸ்டாலின் பேசியதாவது:ஆளுங்கட்சியை தான், ஊடகங்கள் அதிகமாக எழுதுவர்; விமர்சிப்பர். ஆனால், தமிழக ஊடகங்கள், தி.மு.க.,வுக்கு தும்மல் வந்தால், இருமல் வந்தால், அதை பூதாகரமாக்கி வருகின்றன என்றால், உண்மையில் ஆளுங்கட்சி, தி.மு.க., தான் என, தமிழக ஊடகங்கள் நினைக்கின்றன. அவர்கள் ஆசை இன்னும், எட்டு மாதத்தில் நிறைவேறி விடும்.



தேர்தல் எப்போது நடந்தாலும், நாம் தான் வெற்றி பெற போகிறோம். அந்த வெற்றியை எளிதில் பெற்றிட முடியாது. போராடித் தான் பெற வேண்டும். அதற்கு அனைவரும் தயாராக வேண்டும். ஆளுங்கட்சியின் ஊழல், வாக்குறுதிகள், பாதியில் நின்று போன திட்டங்கள், கொரோனாவிலும் கொள்ளையடிக்கும் கொடிய ஆட்சி குறித்த தகவல்களை திரட்டுங்கள்; மக்களுக்கு நினைவூட்டுங்கள். தமிழகத்தின் கடன், 4..45 லட்சம் கோடி ரூபாய். இதைத்தான் சாதனை என, சொல்கின்றனர். இந்த வேதனை மிகுந்த ஆட்சியை, வீட்டுக்கு அனுப்புவதற்கான பணியை, உடனே துவக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.



ஆனந்த கண்ணீர்!



* தேசிய அளவில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பொதுக்குழு கூட்டம் நடத்திய முதல் கட்சி என்ற பெயர், தி.மு.க.,வுக்கு கிடைத்துள்ளது

* பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவரும், சென்னை, மெரினாவில் உள்ள, கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று, மரியாதை செலுத்தினர்

* இளைஞரணி செயலராக உதயநிதி பொறுப்பேற்ற பின், அவர் பங்கேற்ற முதல் பொதுக்குழு என்பதால், அவருக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது

* புதிய நிர்வாகிகளை, ஸ்டாலின் வாழ்த்தி பேசினார். தன்னை பாராட்டி, ஸ்டாலின் உருக்கமாக பேசியபோது, துரைமுருகன் ஆனந்த கண்ணீர் வடித்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை