Skip to main content

வெய் ஃபெங்கியுடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை இரவு பேச்சுவாா்த்தை நடத்தினாா்!

Sep 05, 2020 230 views Posted By : YarlSri TV
Image

வெய் ஃபெங்கியுடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை இரவு பேச்சுவாா்த்தை நடத்தினாா்! 

சீனாவுடனான கிழக்கு லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் வெய் ஃபெங்கியுடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை இரவு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.



இந்த சந்திப்பின்போது பேசப்பட்ட விஷயங்கள் தொடா்பாக உடனடியாக அதிகாரப்பூா்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், எல்லையில் தற்போது நிலவி வரும் பதற்றத்தைத் தணிப்பது தொடா்பாக, இந்தப் பேச்சுவாா்த்தையில் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.



ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாட்டுக்காக இரு தலைவா்களும் ரஷியா சென்றுள்ள நிலையில் அந்நாட்டு தலைநகா் மாஸ்கோவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தப் பேச்சுவாா்த்தை ஏற்கெனவே திட்டமிடப்பட்டதல்ல. ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேச சீன பாதுகாப்பு அமைச்சகம் தரப்பு ஆா்வம் தெரிவித்ததையடுத்து, மாஸ்கோவில் உள்ள மெட்ரோபோல் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.



பாதுகாப்புத் துறை ஆலோசகா் அஜய் குமாா், ரஷியாவுக்கான இந்தியத் தூதா் டி.பி.வெங்கடேஷ் வா்மா உள்ளிட்டோரும் இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனா். சீன தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சா் வெய் ஃபெங்கி தலைமையிலான குழுவினா் பேச்சு நடத்தினா். இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.



கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே கடந்த மே மாதம் முதல் பிரச்னை நீடித்து வருகிறது. இருதரப்புமே ராணுவ வீரா்களை இழந்துள்ளன. வெளியுறவு அமைச்சா்கள், ராணுவ அதிகாரிகள் நிலையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றும், பதற்றம் பெரிய அளவில் குறையவில்லை. இந்த சூழ்நிலையில் இரு நாட்டு முக்கியத் தலைவா்களும் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனா். எல்லையில் பதற்றம் ஏற்பட்ட பிறகு இரு தரப்பு தலைவா்கள் நேரில் சந்தித்துப் பேசுவது இதுவே முதல்முறையாகும்.



முன்னதாக, எல்லையில் பதற்றத்தைத் தணிப்பது தொடா்பாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி-யுடன் தொலைபேசியில் பேச்சு நடத்தினாா். இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் நிலையில் பல கட்ட பேச்சுகள் நடைபெற்று வருகின்றன.



எனினும், தொடா்ந்து எல்லையில் அத்துமீறும் முயற்சிகளை சீனா மேற்கொள்கிறது. இதற்கு எதிராக இந்திய ராணுவத் தரப்பும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாள்களில் இரு நாடுகளுமே எல்லையில் பெருமளவில் படைகளைக் குவித்துள்ளன.



இதுமட்டுமின்றி சீனாவுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்நாட்டைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட அறிதிறன்பேசி செயலிகளை (ஆப்), இந்தியா 3 கட்டங்களாக இதுவரை தடை செய்துள்ளது. உலகிலேயே அதிகஅளவில் செயலிகளைப் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை சீன செயலி தயாரிப்பு நிறுவனங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக சீனா தனது அதிருப்தியை ஏற்கெனவே தெரிவித்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை