Skip to main content

கடலூர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம்!

Sep 04, 2020 279 views Posted By : YarlSri TV
Image

கடலூர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம்! 

காட்டுமன்னார்கோவில் அருகே குறுங்குடி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் தற்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிக்கப்பட்டாலும் நான்காம் கட்ட தளர்வாக தொழிற்சாலைகள், நிறுவனங்கள் 100 பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.



இந்த அறிவிப்பினை அடுத்து பல தொழிற்சாலைகளில் பணிகள் தொடங்கியுள்ளன. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குறுங்குடி கிராமத்தில் சின்னதுரை என்பவரின் மனைவி காந்திமதிக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் வில்வர் ஃபயர் ஒர்க்ஸ் தொழிற்சாலை செயல்பட்டு வந்துள்ளது. இந்த தொழிற்சாலையில், இன்று செப்டம்பர் 4 பெண்கள் பணிக்கு பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 11 மணி அளவில் திடீரென பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் காந்திமதி, அதே பகுதியைச் சேர்ந்த ராசாத்தி, லதா, மலர்க்கொடி, சித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



இந்த வெடிவிபத்தில் படுகாயம் அடைந்த ரத்னாம்பாள், தேன்மொழி, அனிதா ருக்குமணி ஆகிய 4 பேர் மீட்கப்பட்டு காட்டுமன்னார்கோவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் மேலும் 2 பெண்கள் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதனால், பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்ததில் பட்டாசு தயாரிக்கும் ஆலை கட்டிடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.



பட்டாசு ஆலையில் நடந்த இந்த பயங்கர வெடி விபத்து குறித்து சிதம்பரம் உதவி ஆட்சியர், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபினவ், ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். விபத்துக்குள்ளான பட்டாசு தொழிற்சாலை கட்டிடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகியுள்ளதால், பட்டாசு ஆலையில் அனுமதிக்கப்பட்ட பட்டாசுகள் மட்டும்தான் தயாரிக்கப்பட்டதா அல்லது, நாட்டு வெடிகுண்டுகள் ஏதேனும் தயாரிக்கப்பட்டதா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, கடலூர் மாவட்டம் குறுங்குடி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.



மேலும், வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர், அமைச்சரையும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு அனுப்பி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறவும் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை