Skip to main content

அரசியல் கட்சி பெயரை எப்போது அறிவிக்கலாம் என்பது குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்!

Sep 04, 2020 262 views Posted By : YarlSri TV
Image

அரசியல் கட்சி பெயரை எப்போது அறிவிக்கலாம் என்பது குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்! 

சட்டசபை பொது தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. அரசியல் கட்சி பெயரை எப்போது அறிவிக்கலாம் என்பது குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.



கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து 2020-ம் ஆண்டு கொஞ்ச கொஞ்சமாக மீண்டு வருகிறது. அரசால் அறிவிக்கப்படும் தளர்வுகள் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கையும் மெல்ல, மெல்ல மீள தொடங்கியிருக்கிறது.



இந்த சூழ்நிலையில், தமிழக அரசியலில் அடுத்தக்கட்டம் ஆரம்பமாகி விட்டது. இன்னும் 7 மாதத்தில் சட்டமன்ற பொது தேர்தல் வர இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்களை ஆள்பவர் யார் என்ற கேள்விக்கு சட்டசபை தேர்தல் விடையளிக்க இருக்கிறது. யார், யாருடன்? கூட்டு சேர்வார்கள் என்ற அரசியல் ஜோதிட ஆரூடமும் பன்முனையில் இருந்து கிளம்ப தொடங்கி விட்டது.



ஆளும் கட்சியான அ.தி.மு.க. இப்போதே பிரசாரத்தை முன்னெடுக்க தொடங்கி விட்டது. அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை முன் வைத்து மக்களை சந்திக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் அரசியல் சார்ந்த கருத்துகளை வெளியிட தொடங்கியிருக்கிறது.



தனித்து போட்டி என்ற கோஷத்தை தே.மு.தி.க.வும், பா.ம.க. இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று பா.ம.க.வும், பா.ஜ.க.வின் மாறுபட்ட கருத்துகளும் அ.தி.மு.க. கூட்டணிக்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் கூட்டணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அக்கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.



பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக தொடங்கப்பட்டுள்ளது.



இதற்கிடையே, சட்டசபை தேர்தலில் தனித்து களம் காண்பதா? கூட்டணி வைத்து போட்டியிடுவதா? என்பது குறித்து கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. சீமானை தலைமை ஒருங்கிணைப்பாளராக கொண்டு இயங்கும் நாம் தமிழர் கட்சியும் சட்டசபை தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.



கிட்டத்தட்ட சட்டசபை தேர்தலுக்கு 7 மாதங்களே உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் எப்போது தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நவம்பரியில் ரஜினிகாந்த் தன்னுடைய கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது.



தற்போது உள்ள கொரோனா சூழ்நிலையில் அதிகமாக கூட்டம் சேர்த்து மாநாடோ, பொதுக்கூட்டமோ நடத்த முடியாது என்பதால் கட்சி பெயர் அறிவிப்பை எந்த வகையில் வெளியிடுவது என்பது குறித்து ரஜினிகாந்த் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.



இதற்கிடையே, அனைத்து அரசியல் கட்சிகளும் காணொலி காட்சி வழியாக தொண்டர்களை சந்திக்கவும், அரசியல் வியூகங்களை வகுக்கவும் முதற்கட்டமாக திட்டமிட்டுள்ளன. அதன்படி, இப்போதே அரசியல் கட்சி தலைவர்கள் மாவட்டம் வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் தொகுதி நிலவரம் குறித்து காணொலி காட்சியாக கலந்துரையாடி வருகின்றனர்.



இ-பாஸ் முறை நீக்கப்பட்டுள்ளதால் மாவட்டங்களுக்குள் பயணித்து கட்சி தொண்டர்களை நேரடியாக சந்திக்கவும் அரசியல் கட்சி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். கட்சிக்கு புதிய நிர்வாகிகளை சேர்த்தல், வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், பூத் வாரியாக நிர்வாகிகள் நியமனம் போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் தங்களை தீவிரப்படுத்தி கொண்டுள்ளது.



வரும் நவம்பர், டிசம்பர் மாத இறுதியில் இருந்து சட்டசபை தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்த இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணியை தாண்டி புது, புது கட்சிகளின் வருகையும், புதிய கூட்டணிகளும் சட்டசபை தேர்தலில் களம் காண இருக்கிறது. இதில் எந்த கூட்டணி, எந்த கட்சி ஆட்சியை கைப்பற்ற போகிறது என்பது இன்னும் 7 மாதத்தில் தெரிந்து விடும்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை