Skip to main content

கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் வரை ஜெ.இ.இ., நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

Aug 25, 2020 229 views Posted By : YarlSri TV
Image

கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் வரை ஜெ.இ.இ., நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்  

கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் வரை ஜெ.இ.இ., நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்” என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: 2020ம் ஆண்டுக்கான நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகளை எழுதும் மாணவர்கள் சந்திக்கும் இடர்களை, உடனடியாக தங்களது கவனத்திற்குக் கொண்டுவர இக்கடிதத்தை எழுதுகிறேன்.



கொரோனா வைரஸ் பேரழிவு மட்டுமில்லாது, மக்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடிய சமீபத்திய வெள்ளப் பாதிப்புகளில் இருந்தும் பல பகுதிகள் இன்னும் மீள வேண்டியிருக்கிறது.



இந்த நெருக்கடியான நேரத்தைச் சமாளிக்கும் முயற்சியில் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.



தற்போது பொதுப் போக்குவரத்திற்கும் தடைகள் உள்ள நிலையில், தேர்வு மையங்களை அனைவரும் அணுக முடியாத சூழல் நிலவுகிறது மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களும், வசதி வாய்ப்புகள் குறைந்த மாணவர்களும் தேர்வு மையங்களைச் சென்றடைவது இயலாத ஒன்றாகும். 



பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த போதும் கடந்த மார்ச் 24ம் தேதி தமிழக அரசால் நடத்தப்பட்ட பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில், ஏறத்தாழ 35,000 மாணவர்கள் பங்குபெறவில்லை என்பது இதனைத் தெளிவாக உணர்த்தும். இந்த ஆண்டுக்கான நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகளை சுமார் 25 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என்று தெரிகிறது.



அதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான அல்லது அதற்கான அறிகுறிகள் இல்லை என்பதற்கான சோதனை நடைபெறுவதைத் தேசிய தேர்வு முகமை கட்டாயமாக்கியிருக்கிறது.



தேர்வு எழுத வரும் யாருக்கேனும் வைரஸ் தொற்று இருந்தால், நாடு முழுவதும் மீண்டும் ஒரு தொற்று அலை உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மாணவர்களின் உயிரைப் பணயம் வைத்து எந்தவொரு முடிவும் அவசரகதியில் எடுக்கப்படக் கூடாது.



மாணவர்களின் உடல்நலனையும், எதிர்காலத்தையும் அரசு கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும்.



கடும் இடர்ப்பாடுகளின் அடிப்படையில், கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும்வரை ஜெ.இ.இ. மற்றும் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.



இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் யாருக்கேனும் வைரஸ் தொற்று இருந்தால், நாடு முழுவதும் மீண்டும் ஒரு தொற்று அலை உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை