Skip to main content

தூத்துக்குடி வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட போலீஸ்காரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்!

Aug 20, 2020 244 views Posted By : YarlSri TV
Image

தூத்துக்குடி வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட போலீஸ்காரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்! 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மேல மங்கலக்குறிச்சியைச் சேர்ந்தவர் துரைமுத்து (30). பிரபல ரவுடியான இவர் மீது 4 கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஜாமீனில் வெளி வந்த இவர், கூட்டாளிகளுடன் வல்லநாடு அருகே மணக்கரை மலையடிவாரத்தில் பதுங்கியிருந்துள்ளார்.



தகவலறிந்து அவரை பிடிக்க டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் தனிப்படையினர் நேற்று முன்தினம் அங்கு சென்றனர். அப்போது துரைமுத்து நாட்டு வெடிகுண்டை வீசியதில் போலீஸ்காரர் சுப்பிரமணியன் தலை சிதறி பலியானார்.



மற்றொரு குண்டை வீசியபோது அது வெடித்து துரைமுத்துவும் இறந்தார். அங்கு பதுங்கியிருந்த துரைமுத்துவின் சகோதரர் சுவாமிநாதன், உறவினர் சிவராமலிங்கம், வேட்டை தடுப்பு காவலர் சுடலைக்கண்ணு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.



போலீஸ்காரர் சுப்பிரமணியன் உடல் நெல்லை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று மதியம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டு சொந்த ஊரான ஏரல் அருகே பண்டாரவிளையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.



பின்னர் சுப்பிரமணியன் உடல் அமரர் ஊர்தியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. சுமார் 200 மீட்டர் தூரம் வரை டிஜிபி திரிபாதி, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தாமோர், தென் மண்டல ஐஜி முருகன், நெல்லை சரக டிஐஜி பிரவின் குமார் அபிநபு, தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் காவலர் உடலை சுமந்து சென்றனர். மயானத்தில், சுப்பிரமணியன் உடலுக்கு டிஜிபி திரிபாதி, தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர்.



இதைத் தொடர்ந்து 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.



* 'உயிரோடு அவர் வேண்டும்' மனைவி கதறல்

வெடிகுண்டு வீச்சில் பலியான காவலர் சுப்பிரமணியனின் மனைவி புவனேஸ்வரி இறுதிச் சடங்கிற்கு வந்த டிஜிபி திரிபாதி, கலெக்டர் சந்தீப்நந்தூரியிடம் கண்ணீர் விட்டு கதறினார்.



அப்போது அவர் கூறுகையில், ‘‘10 மாத ஆண் குழந்தையின் தாயான நான், தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளேன். என் கணவர் உயிரோடு வேண்டும்’’ என்று திரும்பத் திரும்ப கூறினார். அவரது கதறல் அனைவரது நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.



* 480 காவல் நிலையங்களில் அஞ்சலி

 காவல் துறை தென்மண்டலத்திற்கு உள்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள 480 காவல் நிலையங்களிலும் ரவுடியால் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட காவலர் சுப்பிரமணியனின் உருவப்படம் வைக்கப்பட்டு போலீசார் மலரஞ்சலி செலுத்தினர்.    



* மு.க.ஸ்டாலின் இரங்கல்

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில், காவலர் சுப்பிரமணியன் நாட்டு வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.



பணியில் உயிரிழந்த காவலருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவரது குடும்பத்திற்கு அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.



இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க, பணியில் இருக்கும் காவலர்களின் பாதுகாப்பினை தமிழக காவல்துறை உறுதி செய்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.



* வெடிகுண்டு கலாச்சாரம் இல்லை: டிஜிபி திரிபாதி பேட்டி

டிஜிபி திரிபாதி அளித்த பேட்டி: ரவுடி பயன்படுத்திய வெடிகுண்டில் ஆணிகள் இருந்தன. இது ஒரு வகையான புதிய தொழில்நுட்பம்.



வழக்கமாக ரவுடிகள் தயாரிக்கும் வெடிகுண்டுகளில் பீங்கான்கள், குண்டூசிகள் மட்டுமே இருக்கும். இதில் ஆணிகள் இருந்ததால், இந்த தொழில்நுட்பத்தை முறியடிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை கையாள்வதற்கு காவல்துறையினருக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.



தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் இல்லை. தற்போது வெடிகுண்டுகள் வெடிப்பது குறைந்து வருகின்றன. காவலர்கள் இறந்தால் சிலருக்கு ரூ.1 கோடியும், சிலருக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்படுவதால் பாரபட்சம் காட்டுவதாக நினைக்கக் கூடாது. வல்லநாடு சம்பவம் ‘என்கவுன்டர்’ இல்லை என்றார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை