Skip to main content

நாட்டின் பெருமையை பாரதீய ஜனதா அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

Jun 15, 2020 328 views Posted By : YarlSri TV
Image

நாட்டின் பெருமையை பாரதீய ஜனதா அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார். 

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் நடைபெற்ற கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் ராஜ்நாத் சிங் நேற்று உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது:-சீனாவுடன் என்ன பிரச்சினை ஏற்பட்டாலும், அதற்கு தீர்வு காண ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். இதேபோல் சீனாவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விருப்பம் தெரிவித்து உள்ளது. ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலமும், தூதரக ரீதியிலும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாங்கள் முயற்சிக்கிறோம்.இந்த விஷயத்தில் யாரிடமும் எதையும் மத்திய அரசு மறைக்காது. நாட்டின் பெருமையை பாரதீய ஜனதா ஒருபோதும் விட்டுக் கொடுக்காது.ராணுவ ரீதியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. ரபேல் போர் விமானங்கள் ஜூலை மாதம் இந்தியா வந்து சேரும். அதன்பிறகு நமது விமானப்படையின் பலம் அதிகரிக்கும். யாரையும் மிரட்டுவதற்காக நமது பலத்தை நாம் அதிகரிக்க விரும்பவில்லை. நமது பாதுகாப்புக்காக மட்டுமே பலத்தை அதிகரிக்கிறோம்.சவால்களை எதிர்கொண்டு பாரதீய ஜனதா வெற்றி கொள்ளும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பாரதீய ஜனதா நம்பிக்கை வைத்து இருக்கிறது. 1984-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா 2 இடங்களில்தான் வெற்றி பெற்றது. அப்போது அரசியல் நிபுணர்கள் பாரதீய ஜனதாவின் கதை முடிந்தது என்றார்கள். அந்த சமயத்தில் வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள் அதை சவாலாக ஏற்றுக் கொண்டு கட்சியை வளர்த்தார்கள்.1984-ம் ஆண்டில் 2 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறது.கொரோனா நோய்த்தொற்றால் பல நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளன. ஆனால் இந்தியாவில் பிரதமர் மோடி இதை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு பல பெரிய, முக்கியமான முடிவுகளை எடுத்து உள்ளார். சரியான நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தியதன் மூலம் ஏராளமான உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம்.சுயசார்பு இந்தியா பற்றி மோடி பேசி வருகிறார். நாம் தொடர்ந்து தீவிரமாக பாடுபட்டால் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா தன்னிறைவு அடைவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. பல்வேறு மக்கள் நல திட்டங்களை பாரதீய ஜனதா அரசு செயல்படுத்தி வருகிறது.இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபோதும் பலிக்காது. சரியான பதிலடி கொடுக்கப்படும்.காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட இருக்கும் வளர்ச்சியை பார்த்து பாகிஸ்தான் வசம் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பொறாமை கொள்வதோடு இந்தியாவின் பக்கம் சாயும். காஷ்மீருக்கு தற்காலிக ஏற்பாடாகத்தான் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. அதை ரத்து செய்து இருக்கிறோம்.முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மத்திய அரசால் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட பணம் தவறாக பயன்படுத்தப்பட்டது. அங்கு ஊழல் நடைபெற்றது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியவர்களுக்கு முடிவு கட்டி இருக்கிறோம். மதசார்பின்மை என்ற வார்த்தையை காங்கிரஸ் தவறாக பயன்படுத்துகிறது.இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா தேசிய செயலாளர் ராம் மாதவ், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு துறை மந்திரி ஜிதேந்திர சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை