Skip to main content

88 சதவீதம் பேருக்கு தமிழகத்தில் அறிகுறியே இல்லாமல் கொரோனா பாதிப்பு

May 26, 2020 306 views Posted By : YarlSri TV
Image

88 சதவீதம் பேருக்கு தமிழகத்தில் அறிகுறியே இல்லாமல் கொரோனா பாதிப்பு  

சென்னை, 



 



தமிழகத்தில் நேற்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், நிருபர்களிடம் கூறியதாவது:-



 



தமிழகத்தில் நேற்று 712 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 549 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மராட்டியத்தில் இருந்து 87 பேரும், குஜராத்தில் இருந்து 3 பேரும், கேரளாவில் இருந்து 2 பேரும், ஆந்திராவில் இருந்து ஒருவரும் என தமிழகம் வந்த 93 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நேற்று பாதித்தோரின் எண்ணிக்கை 805 ஆக உள்ளது.



தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 21 ஆயிரத்து 450 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 11 ஆயிரத்து 835 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 491 ஆண்கள் மற்றும் 314 பெண்கள் ஆவர்.



 



தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில் 407 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 8 ஆயிரத்து 731 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் நேற்று 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் 5 பேர் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.



 



வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் இதுவரை 942 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மராட்டியத்தில் இருந்து 726 பேரும், குஜராத்தில் இருந்து 21 பேரும், மேற்கு வங்காளத்தில் இருந்து 19 பேரும், டெல்லியில் இருந்து 15 பேரும் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சோதனைச்சாவடியில் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.



 



தமிழகத்துக்கு நேற்று 11 உள்நாட்டு விமானங்கள் வந்துள்ளது. இதில் 484 பேர் வந்துள்ளனர். விமான நிலைய அதிகாரிகளுடன் இணைந்து மருத்துவ குழுக்கள் அவர்களை பரிசோதனை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



 



மருத்துவ வல்லுனர்கள் குழு ஆராய்ச்சியில், இதுவரை பாதிக்கப்பட்டவர்களில், அறிகுறிகள் இல்லாமல் 88 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. அறிகுறிகளுடன் 12 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 12 சதவீதத்தில், காய்ச்சலால் 40 சதவீதமும், இருமலால் 37 சதவீதமும், தொண்டை வலியால் 10 சதவீதமும், மூச்சுத்திணறலால் 9 சதவீதமும், மூக்குச்சளியால் 5 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.



 



மேலும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள 118 உயிரிழப்புகளில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு நாள்பட்ட பல்வேறு நோயுடன் இருந்த 84 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தாலும் பாதிக்கப்பட்டு கொரோனா தொற்றுடன் இருந்தவர்களை அதிகம் உயிரிழந்துள்ளனர். மற்ற நோய் பாதிப்பு எதுவும் இல்லாமல் கொரோனா வைரசால் மட்டும் 16 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.



 



தமிழகத்தில் உயிரிழந்தவர்களில் 50 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே. தமிழகத்தில் உயிரிழப்புகளை தடுக்க பயன்படுத்தப்படும் யுத்திகளை மற்ற மாநிலங்கள் பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.



 



இவ்வாறு அவர் கூறினார்.



 



சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-



 



தமிழகத்தில் நேற்று 805 பேர் கொரோனா நோய் தொற்றல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதித்தோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 82 ஆக அதிகரித்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 93 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. தமிழக மருத்துவமனையில் நேற்றைய நிலவரப்படி 8 ஆயிரத்து 230 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 5 ஆயிரத்து 608 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.



 



தமிழகத்தில் நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 41 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 93 முதியவர்களும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



 



தமிழகத்தில் நேற்று 19 மாவட்டங்களில் புதிதாக பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளனர். அந்த வகையில் சென்னையில் 549 பேரும், செங்கல்பட்டு 54 பேரும், திருவண்ணாமலையில் 41 பேரும், திருவள்ளூரில் 37 பேரும், காஞ்சீபுரத்தில் 19 பேரும், தூத்துக்குடி, விருதுநகரில் தலா 17 பேரும், நெல்லையில் 15 பேரும், கள்ளக்குறிச்சியில் 10 பேரும், சேலத்தில் 6 பேரும், ராமநாதபுரத்தில் 5 பேரும், ராணிப்பேட்டையில் 4 பேரும், கன்னியாகுமரியில் 3 பேரும், தேனியில் 2 பேரும், திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை