Skip to main content

கொரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் இருப்பதால் ஜீன் 14வரை ஊரடங்கு நீடிப்பு

May 26, 2020 365 views Posted By : YarlSri TV
Image

கொரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் இருப்பதால் ஜீன் 14வரை ஊரடங்கு நீடிப்பு  

சென்னை: தமிழகத்தில் வருகிற 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் கொரோனா நோய் தொற்றும், இறப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஜூன் 14ம் தேதி வரை நீட்டிப்பது குறித்தும், விமானம், ரயில் சேவையை தொடர்ந்து பேருந்துகளை இயக்கலாமா என்பது குறித்தும்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை 70 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி மார்ச் 24ம் தேதி முதல் மே 4ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின்போது பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது.



அதை தொடர்ந்து மே 4ம் தேதி முதல் 3வது கட்ட ஊரடங்கின்போது, குறைந்த அளவு ஊழியர்களை கொண்டு தொழிற்சாலைகள், அலுவலகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதுடன், தனி கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் ஓரளவு இயல்பு நிலை திரும்பியது. ஆனாலும், தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் அதிகரித்தபடியே இருந்தது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்தது. இதையடுத்து மே 18ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை 4வது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டது.



தமிழகத்தில் கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் திறக்க அனுமதிக்கப்பட்டாலும் பொது போக்குவரத்தான விமானம், ரயில், பேருந்து, ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று (25ம் தேதி) முதல் விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்திலும் சில விமானங்கள் இயக்கப்படுகிறது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் ரயில் போக்குவரத்துக்கும்

தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் ஆட்டோக்களை இயக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும், சென்னையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி உச்சத்தை தொட்டபடியே உள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 565 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.



தமிழகத்தில் இதுவரை சுமார் 16,800 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 120 பேர் இறந்துள்ளனர். சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட 4வது கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 5 நாட்களே உள்ளன. விமானம், ரயில், ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் பேருந்து சேவை மற்றும் மின்சார ரயில் சேவை, வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை செய்ய அனுமதி அளிப்பது உள்ளிட்ட சிலவற்றுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை.



இதுபோன்ற பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கலாமா அல்லது தொடர்ந்து ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காகவும், அரசுக்கு ஆலோசனை வழங்கவும் 19 மருத்துவர்களை கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த குழுவினருடன் ஆலோசனை பெற்றுதான் ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் படிப்படியான தளர்வுகளை முதல்வர் எடப்பாடி அறிவித்து வருகிறார்.



அதன்படி, மருத்துவ நிபுணர்களுடன் இன்று நேரிலும், வீடியோ கான்பரன்சிங் மூலமும் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையின்போது மருத்துவர்கள் அரசுக்கு வைக்கும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகள் அல்லது ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக குறைந்த எண்ணிக்கையில், குறைந்த பயணிகளுடன் பேருந்துகளை இயக்க ஜூன் 1ம் தேதி முதல் அனுமதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அமைச்சர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடனும் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பிறகு, இந்த வார இறுதியில் தமிழகத்தில் 5வது கட்ட ஊரடங்காக மேலும் ஜூன் 14ம் தேதி வரை நீடிப்பதுடன் கூடுதலாக சில தளர்வுகளையும் அறிவிக்க முதல்வர் எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



அதேநேரம், பிரதமர் மோடியும் இன்னும் ஒரு சில நாட்களில் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, ஊரடங்கை நீட்டிப்பதா, வேண்டாமா என்று கருத்து கேட்பார். இதையடுத்து மத்திய அரசும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் முடிவை பார்த்துவிட்டு, தமிழக அரசு தனது முடிவை வருகிற 30 அல்லது 31ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

14 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

14 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை