Skip to main content

டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

May 18, 2020 320 views Posted By : YarlSri TV
Image

டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருப்பதால், ஜூன் 12ல் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், கரூர்,  திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உட்பட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு குறையாமல் இருந்தால், டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்.  கடந்தாண்டு ஜூன் 12ம்தேதி, மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால், அணையில் இருந்து குறித்த நாளில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.



இரு மாதங்கள் தாமதமாக ஆகஸ்ட் 13ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டு ஜனவரி 28ம் தேதி, அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனிடையே ஆகஸ்ட் 13ம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து  276வது நாளாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் உள்ளது. கடந்த 2005-2006ம் ஆண்டில் தொடர்ந்து 427 நாட்கள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறை யாமல் இருந்தது. அதன்பிறகு 14 ஆண்டுகளுக்கு பிறகு  நடப்பாண்டில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 276 நாட்கள் 100 அடிக்கு குறையாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால், நடப்பாண்டில் குறித்த நாளான ஜூன் 12ம்தேதி, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். கடந்த  2008ம் ஆண்டு குறித்த நாளான ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப் பட்டது. அதன் பிறகு 12 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில், ஜூன் 12-ம் தேதி குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,  மேட்டூர் அணையில் தற்போது போதிய நீர் இருப்பதால் பாசனத்திற்கு அணையை திறக்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணை திறப்பு அறிவிப்பினை காலதாமதமின்றி வெளியிட வேண்டும்  விவசாயிகள், விவசாயத்  தொழிலாளர்களுக்கு மானியங்கள் தடையின்றி கிடைக்க வேண்டும். விவசாயக்கடன், விதை, இடுபொருட்கள் தடையின்றி கிடைத்திட நடவடிக்கை எடுத்திடுக. மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை இலவசமாக வழங்கிடவும் நடவடிக்கை  எடுத்திடுக என்றும் தெரிவித்துள்ளார்.

 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை