Skip to main content

நாட்டை முன்னேற்றுவோம்?

Jan 26, 2024 38 views Posted By : YarlSri TV
Image

நாட்டை முன்னேற்றுவோம்? 

அடுத்த சில வருடங்களுக்குள் நாட்டை முன்னேற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.



தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த பியகம தேர்தல் தொகுதிக்கு அன்று தான் வந்த போது அந்தப் பிரதேசம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பியகம முதலீட்டு வலயத்தை நிறுவுதல் உள்ளிட்ட சரியான பொருளாதார தீர்மானங்களினால் பியகம மிக குறுகிய காலத்தில் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளதெனவும் தெரிவித்தார்.



அதே முறையில், திறந்த பொருளாதாரத்தில் முழுமையாகப் பயனடையும் வகையில் நாடு முழுவதும் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கி, தேசிய பொருளாதாரத்தை பத்து மடங்கு மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.



சபுகஸ்கந்த அபேசேகரராமவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட போதி மதில் மற்றும் தங்க வேலி திறப்பு நிகழ்வில் நேற்று (25) முற்பகல் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.



சபுகஸ்கந்த அபேசேகரராமாதிபதி, மகாபோதி அக்ரஷாவக்க மகா விகாரை, சாஞ்சி சேத்திய விகாரை (இந்தியா), லங்காஜி விகாரை (ஜப்பான்), ஆகிய விகாரைகளின் விகாராதிபதி, இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவர், ஜப்பான் பிரதம சங்கநாயக, யொசிடா கல்வி மற்றும் சமூக சேவை அறக்கட்டளையின் தலைவர் வண. பானகல உபதிஸ்ஸ நாயக்க, அனுசாசனையின் பேரில் சபுகஸ்கந்த அபேசேகரராம, சாஞ்சி சேத்தியகிரி விகாரை ஆகிய விகாரைகளின் பிரதி விகாராதிபதி பானகல விமலதிஸ்ஸ தேரரின் ஏற்பாட்டில் இந்த சமய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தங்க வேலி மற்றும் போதி மதில் ஆகியவற்றை திறந்து வைத்தார்.



அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வண. பானகல உபதிஸ்ஸ நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.



பின்னர் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,



“அபேசேகரராமய இப்பிரதேசத்தின் பிரதான விகாரையாக இருந்தது. பியகம தொகுதி அமைப்பாளராகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பியகம வேட்பாளராகவும் முதல் தடவையாக இந்த இடத்திற்கு வந்தேன். அப்போது பியகம மிகவும் பின்தங்கிய பிரதேசமாக இருந்தது.



பியகமவிற்கு அடுத்தபடியாக பின்தங்கிய பகுதியாக அகலவத்தை மட்டுமே இருந்தது. இருப்பினும் அகலவத்தையில் தேயிலைத் தோட்டங்கள், இறப்பர் தோட்டங்கள், தேயிலைத் தொழிற்சாலைகள் என்பன காணப்பட்டன. ஆனால் பியகமவில் ஒரேயொரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மாத்திரமே இருந்தது.



இந்த தொகுதியில் தரமான பொருளாதாரம் இல்லை, உறங்கும் அறையை போல் இருக்கிறது. காலையில் எழுந்து சென்று, மாலையில் உறங்குவதற்காக மட்டும் இங்கு வருவதாக சிலர் கூறினார்கள். இருப்பினும், அப்போதைய தேர்தல் காலத்தில் இப்பகுதிக்கு அருகிலுள்ள வீடொன்றிலேயே நான் வசித்து வந்தேன். இந்த அபேசேகரராமவை அண்மித்த காணியில் அமைந்திருந்த கட்டிடத்திலேயே எனது அலுவலகம் காணப்பட்டது.



பொதுத்தேர்தலுக்கு முந்தைய நாள் இரவு அபேசேகரராமவை தரிசித்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று அம்மா கூறினார். அதன்படி, விகாரைக்கு வந்து, மறைந்த நாயக தேரரைச் சந்தித்து, ஆசி பெற்றேன். தேர்தல் முடிவுகளை மீண்டும் கூற வேண்டிய அவசியம் இல்லை. எனது அரசியல் வாழ்க்கை இந்த இடத்தில் இருந்து ஆரம்பித்தது. அந்த அரசியல் பயணம் இன்று ஜனாதிபதி பதவியை எட்டியுள்ளது. நான் புதிய வழியில் ஜனாதிபதி பதவிக்கு வந்தேன். அரசாங்கம் வீழ்ந்த போது எவரும் பொறுப்பேற்க முன்வராத வேளையில், நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.



அப்போது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருந்ததால் நான் நாட்டைப் பொறுப்பேற்றேன். மக்கள் வாழ்வாதரத்திற்கு வழி இருக்கவில்லை. எரிபொருள் மற்றும் எரிவாயு இருக்கவில்லை. அந்த நிலை தொடர்ந்தால் இந்த நாட்டின் இருப்பு கேள்விக்குரியாகிவிடும். எனவே, இந்த நாட்டைக் காப்பாற்றி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகவும், அதனை செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்ததாலும் ஜனாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.



இப்போது இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று படிப்படியாக நாடு இயல்பு நிலைக்குத் திரும்பிகொண்டிருக்கிறது. இன்று தட்டுப்பாடுகள் இல்லை. ஆனால் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் ஏற்படும் பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. தற்போது அந்த நிலையில் இருந்து படிப்படியாக முன்னேறி வருகிறோம்.



வங்குரோத்து நிலையில் இருந்த இலங்கையின் பொருளாதாரம் தற்போது மீண்டு வந்துள்ளதாக சுவிட்சர்லாந்து விஜயத்தின் போது உலகத் தலைவர்களிடம் தெரிவித்தேன். அவர்களில் பலர் இவ்வளவு குறுகிய காலத்தில் நாம் அடைந்திருக்கும் முன்னேற்றம் ஆச்சரியம் அளிப்பதாக தெரிவித்தனர்.



உலக வங்கியின் தலைவர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நாங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளோம், ஆனால் எங்களின் வருமானம் போதுமானதாக இல்லை.



எனவே, நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதனால்தான், துரதிர்ஷ்டவசமாக, VAT வசூலிக்க வேண்டியேற்பட்டது. இப்போது நாம் எதிர்மறை பொருளாதாரத்திற்கு பதிலாக நேர்மறை பொருளாதாரத்தை நோக்கி நகர்கிறோம்.



புதிய தொழில்துறைகள் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி மக்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க வேண்டும். அதற்கான தகுந்த சூழலை உருவாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளோம். நாடு முழுவதும் பியகம முதலீட்டு வலயம் போன்ற முதலீட்டு வலயங்களை உருவாக்கி நாட்டின் பொருளாதார வேகத்தை பத்து மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.



இங்கே நாம் பியகமவை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். அன்று நான் பியகமவுக்கு வந்தபோது இங்கு எதுவுமில்லை என முன்பே கூறினேன். ஆனால் திறந்த பொருளாதாரத்தில் இந்தப் பகுதியை மேம்படுத்த முடியும் என்று நான் நம்பினேன். ஜே.ஆர் ஜயவர்தன கட்டுநாயக்கவில் முதலாவது முதலீட்டு வலயத்தை ஆரம்பித்து வைத்தார். அப்போதும் கட்டுநாயக்க ஒரு அபிவிருத்தியடைந்த பிரதேசமாக இருந்தது.



நான் இரண்டாவது முதலீட்டு வலயத்தை பியகமவிற்கு வழங்குமாறு ஜே.ஆர். ஜயவர்தன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தேன். பியகம போதியளவு வளர்ச்சியடையவில்லை எனவே அதனை வேறு பகுதிக்குக் வழங்குவோம் என்றார்கள் சிலர். எம்முடன் இருப்பவர்களே இதை ஏன் கேட்கிறீர்கள், இதனால் பலன் இல்லை என்றார்கள். ஆனால் நாங்கள் பியகம முதலீட்டு வலயத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தோம்.



மேலும், இப்பகுதியில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. இத்தீர்மானங்களால் அன்று பின்தங்கியிருந்த பியகம இன்று பெரும் அபிவிருத்தியை அடைந்துள்ளது. அதன்படி பியகம மற்றும் கட்டுநாயக்க முதலீட்டு வலயங்கள் தெற்காசியாவின் சிறந்த முதலீட்டு வலயமாக மாறியுள்ளன. நான் பியகமவுக்கு வந்தபோது 15 தொழிற்சாலைகளே இருந்தன. இன்று இங்கு 58 தொழிற்சாலைகள் உள்ளன. மேலும், 180 பெரிய தொழிற்சாலைகளும், 275 நடுத்தர மற்றும் சிறிய தொழிற்சாலைகளும் உள்ளன. இன்று இங்கு பெருமளவான பொருளாதாரம் உருவாகியுள்ளது. அப்போது 200 விற்பனை நிலையங்கள் கூட இருக்கவில்லை. இன்று 4,227 விற்பனை நிலையங்கள் உள்ளன.



தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்க 597 சிற்றூண்டிச் சாலைகளும் உள்ளன. 316 இலத்திரனியல் விற்பனை நிலையங்கள் உள்ளன. 02 சுற்றுலா விடுதிகள் உள்ளன. இங்கு முழுமையான பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பியகமவின் அபிவிருத்தியுடன் களனியும் பல துறைகளில் அபிவிருத்தி கண்டது.



எனவே பியகம திறந்த பொருளாதாரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது. அதனுடன் களனியும் இணைந்துகொண்டது. குறுகிய காலத்தில் தலுகம, கிரிபத்கொட, மாகொல, மாவரமண்டிய, கடவத்தை ஆகியன பெரும் பொருளாதாரத்தை கொண்ட பகுதிகளாக மாறின.



மேலும், இந்த அபிவிருத்தியை நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் செய்ய திட்டமிட்டுள்ளோம். பிங்கிரிய, கண்டி, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, வடக்கு உள்ளிட்ட பகுதிகளை முதற்கட்டமாக அடையாளம் கண்டிருக்கிறோம். எனவே, திறந்த பொருளாதாரத்தைப் பயன்படுத்தி, தேசிய பொருளாதாரத்தை பத்து மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.” என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.



ஜப்பானின் பிரதம சங்கநாயக, வண. பானகல உபதிஸ்ஸ தேரர்,



“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் இல்லம் சபுகஸ்கந்தவாகும். தனது அசல் அரசியல் களமாக இந்தப் பகுதியில் இருந்து அரசியலைத் தொடங்கிய அவர் இன்று அரசியலில் உச்சம் தொட்டிருக்கிறார். அதன்படி ஜனாதிபதியாக இன்று இந்த விகாரைக்கு வருகை ததந்திருக்கிறார். அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவுடன் ரணில் விக்ரமசிங்கவும் வந்திருந்தார். இன்று அவரே ஜனாதிபதியாக விகாரையின் போதி மதிலை திறக்க வந்துள்ளார்.



பியகம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்துள்ள முயற்சிகள் எண்ணற்றவையாகும். பின்தங்கிய பிரதேசமாக இருந்த பியகம ஒரு முதலீட்டு வலயமாக மாற்றப்பட்டதால் இங்கு செழுமை உருவானது. புதிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இங்குள்ள பிள்ளைகளின் கல்வி நிலையை உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பியகம மக்கள் இன்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேசிக்கின்றனர்.



வண. தீனியாவல பாலித நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ, இலங்கைக்கான ஜப்பானிய பிரதித் தூதுவர் கட்சுகி கொட்டாரோ Katsuki Kotaro, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, யொஷிடா சர்வதேச பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பிரதேசவாசிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை