Skip to main content

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி...!

Dec 27, 2023 21 views Posted By : YarlSri TV
Image

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி...! 

 பத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைத்த மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா உள்ளிட்டோரை நேரில் சந்தித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.



பஜ்ரங் புனியாவின் ஊரான ஹரியானாவின் சாரா கிராமத்துக்குச் சென்ற ராகுல் காந்தி, மல்யுத்த பயிற்சி களமான வீரேந்திர அகாராவில் வைத்து அவரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது 2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மற்றொரு மல்யுத்த வீரர் தீபக் புனியாவும் கலந்து கொண்டார்.



இந்த சந்திப்பு தொடர்பாக பஜ்ரங் புனியா கூறுகையில், "ஒரு மல்யுத்த வீரரின் அன்றாட வாழ்க்கை எப்படிச் செல்கிறது என்பதைப் பார்ப்பதற்காக ராகுல் காந்திக்கு இன்றைக்கு இங்கு வந்தார். அவர் என்னுடன் மல்யுத்தம் மற்றும் உடற்பயிற்சி செய்தார். மல்யுத்தத்தின் நுட்பங்களை அறிந்து கொண்டார். மல்யுத்தத்தில் புள்ளிகள் எப்படி கிடைக்கும், அவை எப்படி கணக்கிடப்படுகிறது என்பது போன்ற சில விஷயங்களை கேட்டு தெரிந்துகொண்டார். மேலும் எங்களுடன் அமர்ந்து ரொட்டி சாப்பிட்டார்" என்று தெரிவித்தார்.



சந்திப்பு தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "பல வருட கடின உழைப்பு, பொறுமை மற்றும் ஈடு இணையற்ற ஒழுக்கம் ஆகியவற்றுடன் தனது இரத்தத்தாலும் வியர்வையாலும் ஒரு வீரர் தனது நாட்டிற்கு ஒரு பதக்கத்தை கொண்டு வருகிறார். ஒரே ஒரு கேள்வி - இந்த வீரர்கள், இந்தியாவின் மகள்கள், தங்கள் அரங்கில் போடப்படும் சண்டையை விட்டுவிட்டு, தங்கள் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் தெருவில் போராடினால், மற்ற குழந்தைகளை மல்யுத்த பாதையைத் தேர்ந்தெடுக்க யார் ஊக்குவிப்பார்கள்?. இவர்கள் அனைவரும் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த அப்பாவிகள், நேர்மையானவர்கள், எளிமையானவர்கள், இந்தியாவின் மூவர்ணக் கொடிக்கு இவர்கள் சேவை செய்யட்டும். அவர்கள் முழு மரியாதையுடனும் இந்தியாவை பெருமைப்படுத்தட்டும்." என்று கூறியுள்ளார்.



சந்திப்பின் பின்னணி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தவர் பாஜக எம்.பி.யான பிரிஜ் பூஷண்சரண் சிங். இவர் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டி முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பிரிஜ் பூஷணை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கையும் வைத்தனர். இதையடுத்து அவர் மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கினார். இதற்கிடையே, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர்களைப் போட்டியிட அனுமதிக்கக் கூடாதுஎன்று மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்,பஜ்ரங் பூனியா ஆகியோர் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குரை சந்தித்து வலியுறுத்தினர்.



இதனிடையே, மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பிரிஜ் பூஷண் விவகாரத்தில் மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் போராட்டம், பல்வேறு மாநில மல்யுத்த சங்கங்கள் தொடர்ந்த வழக்கு போன்ற காரணங்களால் தேர்தல் நடத்துவது தள்ளிப்போய்விட்டது. இதனைத் தொடர்ந்து நிர்வாகிகளுக்கான தேர்தலை உரிய நேரத்தில் நடத்த தவறிய காரணத்துக்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்பை உலக மல்யுத்த கூட்டமைப்பு இடைநீக்கம் செய்திருந்தது. இந்தப் பின்னணியில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 21) நடைபெற்றது.



அதைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது பிரிஜ் பூஷணின் ஆதரவாளர் சஞ்சய் சிங் மொத்தமுள்ள 47 வாக்குகளில் 40 வாக்குகள் பெற்று தலைவராக வெற்றிபெற்றார். தலைவர் பதவிக்கான தேர்தலுடன் மூத்த துணைத் தலைவர், 4 துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், இரண்டு இணை செயலாளர்கள் மற்றும் 5 நிர்வாககுழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெற்றது. இதில் 4 துணைத் தலைவர் பதவிகளையும் பிரிஜ் பூஷண் அணியினரே வென்றுள்ளனர்.



இதனால் பிரிஜ் பூஷணுக்கு எதிராக போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றவரான சாக்சி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். மேலும் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தார். இந்த இருவரைத் தொடர்ந்து மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங்கும் மல்யுத்த விளையாட்டில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்தார். இதனைத் தொடர்ந்தே ராகுல் காந்தி மல்யுத்த வீரர்களை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days Minutes ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை