Skip to main content

பிரதமர் தலைமையில் வடகிழக்கு அபார வளர்ச்சி: ராஜ்நாத் சிங் பெருமிதம்!...

Nov 02, 2023 31 views Posted By : YarlSri TV
Image

பிரதமர் தலைமையில் வடகிழக்கு அபார வளர்ச்சி: ராஜ்நாத் சிங் பெருமிதம்!... 

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வடகிழக்கு மாநிலங்கள் அபார வளர்ச்சி அடைந்திருக்கின்றன. அதேசமயம், மணிப்பூரில் நடந்த கலவரத்தால் நாங்கள் வேதனை அடைந்திருக்கிறோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார்.



இம்மாதம் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் மிசோராம் மாநிலமும் ஒன்று. இம்மாநிலத்தில் வரும் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜுஜூ, ராஜ்நாத் சிங் ஆகியோர் சென்றிருக்கிறார்கள்.



தொடர்ந்து, மிசோராமில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராஜ்நாத் சிங், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, ​​மிசோராம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வெகு தொலைவில் இருந்தன. அதேசமயம், அவை நம் இதயங்களிலிருந்தும் வெகு தொலைவில் இருந்தன என்பதுதான் வேதனை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் வடகிழக்கு வேகமாக வளர்ந்து வருகிறது.



நான் கடந்த 20 வருடங்களாக வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்று வருகிறேன். இந்தப் பகுதியை இணைப்பதில் பெரும் சிக்கல் இருந்தது. வடகிழக்கில் உள்ள மாநிலங்களின் தலைநகரங்களுக்குச் செல்வது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. நேரடியான வழி இல்லை. ஆனால், இன்று ஒவ்வொரு வடகிழக்கு மாநிலமும் டெல்லியுடன் நேரடி இணைப்பைக் கொண்டுள்ளது. ஏனென்றால், ஒவ்வொரு மாநிலமும் விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.



2014-ம் ஆண்டு பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றபோது, வடகிழக்கில் 8 விமான நிலையங்கள் மற்றும் 1 நீர்வழித் தடம் மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது வடகிழக்கில் 17 விமான நிலையங்கள் மற்றும் 18 நீர்வழித் தடங்கள் இருக்கின்றன. மேலும், கடந்த 9 ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களில் அமைதியான சூழல் நிலவுகிறது. எனினும், மணிப்பூரில் நடந்த வன்முறையால் நாங்கள் வேதனையடைந்துள்ளோம்.



எந்தப் பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது. பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும். வடகிழக்கு மாநிலங்கள் உண்மையிலேயே வளர்ச்சியடையாத வரை வலுவான, வளமான, தன்னம்பிக்கையான இந்தியா என்ற கனவு நிறைவேறாது. புதிய ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர பொதுமக்கள் விரும்புகிறார்கள். ஆகவே, பா.ஜ.க.வுக்கு வாக்களித்து ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.



மேலும், மணிப்பூரில் உள்ள மெயிட்டி மற்றும் கூகி சமூக மக்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்தார். அப்போது அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உரையாடிய ராஜ்நாத் சிங், பிரச்சனையை பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்குக் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை