Skip to main content

05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான வேலைத்திட்ட

Aug 18, 2023 52 views Posted By : YarlSri TV
Image

05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான வேலைத்திட்ட 

வருடாந்தம் 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.



இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் (16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.



சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியதும், சிறந்த சுற்றுலா வசதிகளை கொண்ட இடமாகவும் இலங்கையை மாற்றுவதற்கான குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.



இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தற்போது முன்னெடுக்கும் திட்டங்கள் மற்றும் தனியார் துறையின் பங்களிப்பு குறித்து அதிகாரிகளிடம் ஜனாதிபதி கேட்டறிந்ததோடு, நடைமுறைச் செயற்பாடுகள் மற்றும் புதிய நிலவரங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர்.



இலங்கையை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக கட்டமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட விடயங்களுக்கமைய சுற்றுலா அமைச்சும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களும் 2025 ஆம் ஆண்டு வரையான மூலோபாயத் திட்டத்தைத் தயாரித்து வருகின்றன. அந்த பணிகள் 95 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.



தனியார் துறையினரின் பங்களிப்புடன் உயர்தர ஹோட்டல் பாடசாலையொன்றை நிர்மாணிப்பதற்கு பொருத்தமான கட்டிடம் ஒன்றை தேடுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் தங்குமிட வசதிகளை மேம்படுத்தும் வகையில், தற்போது பயன்படுத்தப்படாத பாரம்பரிய தோற்றம் கொண்ட கட்டிடங்கள் மற்றும் பங்களாக்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை தயாரிக்குமாறும், தற்போது வரையில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு உட்படாத பகுதிகளை கண்டறியுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.



புதிய முதலீடுகளுக்கு உகந்த சூழலை நாட்டிற்குள் உருவாக்குவதற்கான முதலீட்டு உட்கட்டமைப்பு கூட்டுத்தாபனம் (Investment Infrastructure corporation) ஒன்று நிறுவப்பட்டு, கொள்கை ரீதியிலான் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான சபை யொன்றை ஸ்தாபிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் முதலீட்டு வலயங்கள், சுற்றுலா வலயங்கள், தொழில்நுட்ப வலயங்கள் என்பவற்றை அதன் கீழ் நிறுவத் திட்டமிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.



அதற்கமைய 09 மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில், சுற்றுலாச் சபைகளை ஸ்தாபிக்கவும் ஒவ்வொரு சபைகளின் கீழ் பிராந்திய குழுக்களை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.



இங்கு உரையாற்றிய சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,



எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்காக பெருமள வான சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.



மேலும், மத்திய, ஊவா மாகாணங்களில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு உட்படாத பல இடங்கள் இருப்பதாகவும், குறிப்பாக மத்திய மாகாணத்தில் வளி மாசடைவு குறைந்தளவில் காணப்படுவதால், நிலையான சுற்றுலாத் தளமாக அதனை அபிவிருத்தி செய்வதற்கான இயலுமை காணப்படுவதாகவும், இந்நாட்டின் விமான நிலையம் மற்றும் பூங்காக்களில் நெருக்கடி ஏற்படாத வகையில் சுற்றுலாத்துறை வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.



தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.டீ.பீ. ஹேரத் ஆகியோருடன், சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய அமைச்சுக்களின் பிரதானிகள், இலங்கையை சுற்றுலாப் பயணத்தின் பயணத்தின் இறுதி எல்லையாக மாற்றியமைப் பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் காவன் ரத்னாயக்க உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.



(TN)


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை