Skip to main content

சீனாவின் ஹூவாய், ZTE தொலைத்தொடர்பு 5G வலையமைப்பை தடை செய்கிறது கனடா!

May 20, 2022 78 views Posted By : YarlSri TV
Image

சீனாவின் ஹூவாய், ZTE தொலைத்தொடர்பு 5G வலையமைப்பை தடை செய்கிறது கனடா! 

சீனாவை சேர்ந்த சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஹூவாய் (Huawei Technologies) மற்றும் ZTE ஆகியவற்றின் 5G தொலைத்தொடர்பு வலையமைப்பை தடை செய்யவுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.



தேசியப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.



எங்கள் 5G வலையமைப்பில் இருந்து ஹூவாய் மற்றும் ZTE ஐ விலக்க நாங்கள் உத்தேசித்துள்ளோம் என்று கனடா தொழில் அமைச்சர் பிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின் நேற்று ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.



ஏற்கனவே 5G உபகரணத்தை நிறுவியிருக்கும் சேவை வழங்குநர்கள் நாங்கள் அறிவிக்கும் திட்டங்களின்படி அதன் பயன்பாட்டை நிறுத்தி, அதை அகற்ற வேண்டும். 4G சாதனங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் 2027 இன் இறுதிக்குள் அவற்றையும் அகற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.



சீனாவுடனான இராஜதந்திர பதட்டங்களுக்கு மத்தியில் கனடாவின் இந்த முடிவு ஏற்கனவே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.



கனடா, அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஐந்து கண் கூட்டணியில் (Five Eyes network) கனடா தவிர்ந்த ஏனைய நான்கு நாடுகளும் ஏற்கனவே சீன நிறுவனங்களின் 5G தொலைத்தொடர்பு வலையமைப்பை தடை செய்துள்ளன.



செப்டம்பர் 2018 இல் ஹூவாய் சாதனங்களால் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை மதிப்பாய்வு செய்வதாக கனடா முதலில் அறிவித்தது.



பின்னர் அதே ஆண்டு டிசம்பரில் ஹூவாய் தலைமை நிதி அதிகாரி மெங் வான்சு அமெரிக்க பிடியாணையின் கீழ் கனடாவில் கைது செய்யப்பட்டார். இது சீனாவுடன் நீண்டகால சர்ச்சையை உருவாக்கி இறுதியாக கடந்த செப்டம்பரில் மெங்கின் விடுதலையுடன் முடிவுக்கு வந்தது.



மெங் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு கனடியர்கள் சீனாவால் கைது செய்யப்பட்டு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். இரண்டு பேரும் மெங் விடுவிக்கப்பட்ட அதே நாளில் விடுவிக்கப்பட்டனர்.



இப்போது சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திரப் பதட்டங்கள் ஓரளவு தணிந்துள்ளன. கனேடிய கனோலா விதை இறக்குமதிக்கான மூன்றாண்டு கட்டுப்பாட்டை கடந்த புதன்கிழமை சீனா நீக்கியது. மெங் கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகக் இத்தத் தடை கருதப்பட்டது.



இவ்வாறான நிலையில் கனடாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே மற்ற நிறுவனங்களின் 5G உபகரணங்களை பயன்படுத்தத் தேர்ந்தெடுத்ததை அடுத்து ஹூவாய் மற்றும் ZTE ஆகியவற்றின் 5G தொலைத்தொடர்பு வலையமைப்பை தடை செய்வதாக கனடா தெரிவித்துள்ளது.



இதேவேளை, கனடாவின் இந்த முடிவை சீனா கண்டித்துள்ளது. தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கூறப்படுவது சாக்குப்போக்கு. சீன நிறுவனங்களை அடக்குவதற்கு அமெரிக்காவுடன் இணைந்து கனடா செயற்படுகிறது என கனடாவில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை