Skip to main content

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு!

Oct 07, 2021 174 views Posted By : YarlSri TV
Image

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு! 

பாகிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் உள்ளது. இதன் தலைநகரம் குயட்டாவில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் ஹர்னாய் என்ற நகரம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 3.20 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹர்னாயில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் இதன் மையப்புள்ளி இருந்தது. ரிக்டர் அளவில் 5.9 ஆக நிலநடுக்கம் பதிவானது.



இதனால் ஹர்னாய், தலைநகரம் குயட்டா, சிபி, பிசைன், குய்லா சாய்புல்லா, ஜமான், ஷியார், ஷாப் உள்ளிட்ட பகுதிகள் பயங்கரமாக குலுங்கியது. இதில் வீடுகளும், கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. இந்த பகுதியில் பெரும்பாலும் மண்ணால் வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. நிலநடுக்கத்தின் அதிர்வுகளை தாங்க முடியாமல் அவை இடிந்து விழுந்தன.



அதிகாலை நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் மீது இடிபாடுகள் விழுந்தன. அவற்றில் சிக்கி பலரும் உயிரிழந்தார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இதுவரை வந்துள்ள தகவல்களின்படி 20 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 300 பேர் காயமடைந்து இருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதி ஏராளமான குக்கிராமங்களைக் கொண்டதாகும். மேலும் அந்த பகுதியில் பாலைவனமும், சிறிய குன்றுகளும் அமைந்துள்ளன.



இதனால் சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதியாக அது உள்ளது. எனவே கிராமங்களில் இருந்து இன்னும் சரியான தகவல்கள் வரவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கூறினார்கள்.



ஹர்னாய் நகரத்தில் மட்டுமே 70 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் 6 குழந்தைகள் உள்பட 10 உடல்கள் இருப்பதாகவும், 150 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த நகரின் துணை கமி‌ஷனர் அன்வர் ஹஸ்மி கூறி உள்ளார்.



மேலும் அவர் கூறும்போது, ‘‘பல்வேறு பகுதிகளில் இருந்தும் காயம் அடைந்தவர்கள் தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு வந்தபடி இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல வீடுகள் முற்றிலும் இடிந்து கிடக்கின்றன. அவற்றுக்குள் பலர் சிக்கி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.



எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. எனவே அவர்களில் பலர் உயிரிழக்க வாய்ப்புள்ளது’’ என்று கூறினார்.



பலுசிஸ்தான் மாகாண உள்துறை மந்திரி சையுல்லா லாங்கோ கூறும்போது, ‘‘ஹர்னாய் அருகே உள்ள பெரும்பாலான இடங்களில் பாதிப்பு மோசமாக இருக்கிறது. இன்னும் மீட்பு பணிகள் முழுமையாக தொடங்கவில்லை. பல்வேறு இடங்களில் இருந்தும் மீட்புக்குழுக்களை அங்கே அனுப்பி இருக்கிறோம். சாலைகளும் பாதிப்பு அடைந்து இருப்பதால் சில இடங்களுக்கு மீட்புக் குழுவால் செல்ல முடியவில்லை. எனவே மீட்புப்பணி தாமதமாகி வருகிறது.



பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயே சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழுக்களும் அனுப்பப்பட்டு உள்ளன. அனைத்து பகுதிகளிலும் மீட்புப்பணிகள் முடிந்த பிறகுதான் உயிரிழப்புகள் பற்றிய முழுமையான தகவல்கள் தெரியவரும்’’ என்று கூறினார்.



இதுவரை இறந்திருப்பவர்களில் பெண்கள், குழந்தைகளே அதிகமாக உள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டதற்கு பிறகு பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தார்கள். நிலநடுக்கம் ஏற்பட்டதற்கு பிறகு தொடர்ந்து அதிர்வுகள் ஏற்பட்டு கொண்டே இருந்தன. இதனால் மக்கள் கடும் பீதி அடைந்தார்கள்.



பாகிஸ்தானில் 2019-ம் ஆண்டு ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள மிர்புர் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 30 பேர் பலியானார்கள். 2015-ம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் அதை ஒட்டியுள்ள ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 400 பேர் பலியானார்கள்.



அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாக உள்ளது. அங்கு வருடந்தோறும் பல நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஒரு சில மட்டும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் இந்த நிலநடுக்கமும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

9 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

9 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

9 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

9 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

9 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை