Skip to main content

ஒன்றிய அமைச்சரின் மகன் கார் மோதி உ.பி.யில் 4 விவசாயிகள் பலி!

Oct 04, 2021 177 views Posted By : YarlSri TV
Image

ஒன்றிய அமைச்சரின் மகன் கார் மோதி உ.பி.யில் 4 விவசாயிகள் பலி! 

உத்தர பிரதேசத்தில் ஒன்றிய இணை அமைச்சர், மாநில துணை முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அமைச்சரின் மகன் வந்த கார் மோதியதில் 4 விவசாயிகள் பலியாகினர். விவசாயிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டு உள்ளது. ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு மாநில விவசாயிகள் சங்கம், டெல்லி எல்லைகளில் முகாமிட்டு கடந்த 10 மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒன்றிய அரசுடன் விவசாயிகள் சங்கம் நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் தீர்வு எட்டப்படவில்லை.



இருதரப்பும் தங்கள்து நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன. இதனால், ஒன்றிய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான பிரச்னை முடிவுக்கு வராமல் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா, அவரது சொந்த கிராமமான உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொள்ள நேற்று வந்தார். அப்போது, அவரை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்காக விவசாயிகள் நேற்று காலை முதலே அப்பகுதியில் திரண்டனர். குறிப்பாக, சமீபத்தில் அஜய் மிஸ்ரா விவசாயிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். எனவே, அவரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விடாமல் தடுக்க விவாசாயிகள் திட்டமிட்டனர்.



இதையடுத்து, ஒன்றிய அமைச்சர் வந்த போது, விவசாயிகள் அவரது வாகனத்தை முற்றுகையிட்டனர். அப்போது, கூட்டத்திற்குள் ஒன்றிய அமைச்சரின் பின்னால் வந்த அவரது மகன் கார் தாறுமாறாக புகுந்தது. அந்த வாகனம் ஏறி இறங்கியதில் விவசாயிகள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த காரில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ரா மற்றும் அவரது உறவினர்கள் இருந்தனர். இந்நிலையில், பாதுகாப்பு வாகனம் மோதி விவசாயிகள் இருவர் உயிரிழந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. விபத்து ஏற்படுத்தி சாலையின் ஓரமாக நின்ற காரை விவசாயிகள் தீயிட்டு கொளுத்தினர். இதில் அந்த கார் முழுவதும் எரிந்து நாசமானது.



இதற்கிடையே, ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் நிகழ்ச்சி நடைபெற்ற பான்பூர்பூருக்கு உ.பி. துணை முதல்வர் கேசவ் மவுரியா வந்தார். அப்போது, கோபத்தில் இருந்த விவசாயிகள் துணை முதல்வரின் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் சிலர், அந்த வழியாக வந்த கார்களை மறித்து தாக்குதலில் ஈடுபட்டனர். ஒரு காருக்குள் இருந்தவர்களை வெளியே இழுத்து போட்டு கார்களுக்கு தீ வைத்தனர். இது போன்று இரண்டு கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கார்களில் வந்தர்கள் தாக்கப்பட்டதில் மேலும் நால்வர் உயிரிழந்தனர். ஒட்டு மொத்தமாக இந்த சம்பவங்களால் மொத்தம் 8 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைமந்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இச்சம்பவத்தால் துணை முதல்வர் நிகழ்ச்சியை ரத்து செய்தார்.  இச்சம்பவம் குறித்து சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பினர் தெரிவிக்கையில், அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் ஏறி இறங்கியதில் விவசாயிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆனால், சம்பவ இடத்தில் ஒரு விவசாயி இறந்தார் என்றும், மற்றொருவர் மருத்துவமனையில் இறந்ததாக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் தர்ஷன் பால் கூறினார். கடைசியாக கிடைத்த தகவலின்படி, வன்முறை வெடித்த பின் அந்த வழியே வாகனங்களில் சென்றவர்கள் மீது போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் நால்வர் இறந்ததாகவும் மற்ற நால்வர் விவசாயிகள் என மொத்தம் எட்டு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உபி அரசு ஆறு பேர் பலியானதாக கூறியுள்ளது.



கல்வீசி தாக்கியதால் விபத்து

‘பாஜ.வினர் சென்ற காரின் போது விவசாயிகளுடன் இருந்த சமூக விரோதிகள் கல்வீசி தாக்கியதால், கட்டுப்பாட்டை இழுந்து கார் கவிழ்ந்தது. அதன் ்அடியில் சிக்கி 2 பேர் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு சமூக விரோதிகள்தான் காரணம். இந்த சம்பவங்களின் போது நானோ அல்லது என் மகனோ சம்பவ இடத்தில் இல்லை,’ என்று ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா குற்றம்சாட்டி உள்ளார்.



பாஜ.வினர் நடமாட முடியாது

இந்த சம்பவம் பற்றி சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘‘ஆளும் பாஜ.வின் கொடூரம், இந்த சம்பவம் மூலம் அம்பலமாகி உள்ளது. பாஜ.வினர் இதுபோன்ற வன்முறையில் ஈடுபட்டால் இனிமேல் அவர்கள் தெருவில் நடமாட முடியாது,’’ என்றார்.



இனியும் அமைதியாக இருந்தால் செத்து விட்டதாக அர்த்தம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘விவசாயிகளின் மீது ஒன்றிய அமைச்சரும், பாஜ.வினரும் திட்டமிட்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இனியும் அமைதியாக இருந்தால் நாம் அனைவரும் செத்து விட்டதாக அர்த்தம்,’ என்று ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.



நாடு முழுவதும் இன்று போராட்டம்

விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து, நாடு முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் அலுவலகத்தின் முன்பாக போராட்டம் நடத்தப்படும் என்று டெல்லி விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் பற்றி உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை