Skip to main content

தஞ்சம் புகுந்த ஹைத்தி அகதிகளை விமானங்களில் ஏற்றி திருப்பி அனுப்பும் அமெரிக்கா!

Sep 20, 2021 153 views Posted By : YarlSri TV
Image

தஞ்சம் புகுந்த ஹைத்தி அகதிகளை விமானங்களில் ஏற்றி திருப்பி அனுப்பும் அமெரிக்கா! 

அமெரிக்காவை ஒட்டி மெக்சிகோ நாடு உள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநில பகுதியான டெல் ரியோ அருகே எல்லை பகுதி அமைந்துள்ளது. அதில் ஆறு ஒன்று ஓடுகிறது. அதன் ஒரு பகுதி அமெரிக்காவாகவும், ஒரு பகுதி மெக்சிகோவாகவும் உள்ளது.



இதன் வழியாக வெளிநாட்டு அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைந்து விடுவது வழக்கம். இதை தடுப்பதற்காக எல்லையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.



இந்த நிலையில் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைவதற்காக ஹைத்தி மற்றும் பெரு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான அகதிகள் டெல் ரியோ பாலத்திற்கு அருகே வந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஹைத்தி நாட்டைச் சேர்ந்தவர்கள்.



தொடர்ந்து சாரை சாரையாக வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை அமெரிக்காவுக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்காக எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அந்த அகதிகள், டெல் ரியோ பாலத்துக்கு அடியில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக அதிகளவில் அகதிகள் குவிந்ததை அடுத்து அந்த பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.



 



10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் குவிந்து இருப்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது. இந்த கூட்டத்தில் ஏராளமான கர்ப்பிணி பெண்களும் இருக்கிறார்கள். இவர்களில் 2 பேருக்கு நேற்று குழந்தை பிறந்தது.



 



கைக்குழந்தைகளுடன் ஏராளமான பெண்கள் தவிக்கிறார்கள். கடும் வெயிலுக்கு மத்தியில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அவர்கள் தவிக்கிறார்கள். அகதிகள் அனைவரையும் திருப்பி அனுப்ப அமெரிக்கா தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.



 



அதன்படி அகதிகள் விமானங்களில் ஏற்றப்பட்டு அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.  வெள்ளிக்கிழமையில் இருந்து இதுவரை ஹைத்தி நாட்டுக்கு 3300 அகதிகள் அனுப்பப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். டெல் ரியோ பாலத்தின் அடியில் தங்கியிருக்கும் 12662 அகதிகளை அடுத்த வாரத்தில் விரைவாக அனுப்ப திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க எல்லை ரோந்துப்படை தலைவர் கூறி உள்ளார்.



 



ஹைத்திக்கு அகதிகளை திருப்பி அனுப்பி வைப்பதற்காக தினமும் விமானங்கள் இயக்கப்படும் என்றும், விமானங்களை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை தலைவர் கூறி உள்ளார். அதேசமயம், இந்த விமானங்கள் புலம்பெயர்ந்தவர்களை ஹைத்தி அல்லது அவர்கள் விரும்பும் பிற நாடுகளுக்கு அழைத்துச் செல்லும் என்றும் குறிப்பிட்டார்.



 



அமெரிக்க எல்லையில் முகாமிட்டுள்ள ஹைத்தி அகதிகளில் பலர் நாடு திரும்புவதை விரும்பவில்லை.  மெக்சிகோவில் தங்கியிருக்கவே திட்டமிட்டுள்ளனர். பாலத்தின் கீழ் தங்கியிருக்கும் 35 வயது நபர் ஒருவர் தனது நிலை குறித்து கூறுகையில், ஹைத்தியில் பாதுகாப்பு இல்லை, வேலையும் இல்லை என்றார். நாடு திரும்புவதை விட மெக்சிகோவில் வாழ முயற்சிப்பதாகவும் அவர் கூறுகிறார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை