Skip to main content

அரசமைப்புக்கான வரைவு நகல் நவம்பரில் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Sep 16, 2021 199 views Posted By : YarlSri TV
Image

அரசமைப்புக்கான வரைவு நகல் நவம்பரில் ஜனாதிபதியிடம் கையளிப்பு! 

புதிய அரசமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினர், இறுதிச் சட்டவரைபு எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.



அத்துடன், மேற்படி நிபுணர்கள் குழுவின் ஆயுட்காலமும் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.



கொரோனா வைரஸ் நெருக்கடி நிலைமையால் ஏற்பட்ட சில தாமதங்களைக் கருத்தில்கொண்டே கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.



புதியதொரு அரசமைப்பு உருவாக்கப்படும் என்ற உறுதிமொழியுடனேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிப்பீடம் ஏறினார்.



இந்நிலையில், புதிய அரசமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது.



இந்தக் குழுவானது பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளிடமிருந்து புதிய அரசமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என முன்மொழிவுகளைக் கோரியிருந்தது. இதன்படி பல தரப்பட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மேலதிக விவரங்களுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் இதர தரப்புகளை அழைத்து விளக்கமும் பெற்றிருந்தது.



அதன்பின்னர் விரைவு நகல் தயாரிக்கும் பணி ஆரம்பமானது. தற்போது ஆரம்பகட்ட சட்டவரைவு ஆய்வு நிலையில் உள்ளது என அறியமுடிகின்றது. சட்டவரைவு திணைக்களத்தின் கண்காணிப்பின் பின்னர் இறுதிவரைவு தயாரிக்கப்படும் எனத் தெரியவருகின்றது.



அதேவேளை, தான் ஆட்சிக்கு வந்து ஈராண்டுகள் நிறைவு பெறுவதற்குள் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை