Skip to main content

இந்தியாவை கையாளுவது பொறுத்து தென் இலங்கை ஆட்சியாளரும் ஈழத்தமிழரது அரசியல் கட்சிகளும்?

Feb 04, 2022 115 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவை கையாளுவது பொறுத்து தென் இலங்கை ஆட்சியாளரும் ஈழத்தமிழரது அரசியல் கட்சிகளும்? 

இலங்கை தீவின் அரசியல் களம் இலங்கை - இந்திய அரசியல் உறவினால் தீர்மானிக்கப்படும் நிலையை சமகாலத்தில் அதிகம் அவதானிக்க முடிகின்றது.



ஈழத்தமிழர்களும் இந்தியாவும் கொண்டுள்ள உறவு ஒரு பக்கமும் தென் இலங்கையும் இந்தியா கொண்டுள்ள உறவு இன்னொரு பக்கமுமாக இந்தியா முக்கியத்துவம் பெறும் நிலையை தெளிவாக அவதானிக்க முடிகின்றது.



இதில் ஈழத்தமிழர்கள் இந்தியாவை அணுகும் போக்கிலுள்ள பலவீனத்தையும் தென் இலங்கை இந்தியாவை கையாளும் போக்கிலுள்ள நிலையையும் இக்கட்டுரை அவதானிக்க முயலுகின்றது.



இது எந்த தரப்பினையும் பலவீனப்படுத்துவதற்கான முயற்சி கிடையாது மாறாக ஈழத்தமிழர்களதும் தென் இலங்கை அரசியலதும் போக்கில் காணப்படும் நிலையை மதிப்பவிடுவது மட்டுமே நோக்கமாகும்.



முதலாவது தென் இலங்கை அரசியல் தரப்பினது இந்தியா நோக்கிய உத்திகளை அவதானிப்பது பொருத்தமானது. அதாவது பாரிய நிதியளிப்பும் திருகோணமலை எண்ணெய்க் குதங்களை கையளிப்பதற்கான உடன்பாடுகளை அடுத்து இரு நாட்டுக்குமான உறவு மிக நெருக்கமடைய ஆரம்பித்துவிட்டது.





இந்தியா அதிக நம்பிக்கையுடனும் நெருக்கத்துடனும் இலங்கைத் தீவை அணுக ஆரம்பித்துள்ளது. சீனாவை முற்றாகவே இலங்கைத் தீவிலிருந்து அகற்றிவிட முடியும் என கருதும் நிலையை இந்திய ஆளும் வர்க்கத்திடமும் கொள்கை வகுப்பாளரிடத்திலும் அவதானிக்க முடிகின்றது.



இந்திய ஆய்வுப்புலத்திலும் அத்தகைய நம்பிக்கைகள் நிலவுவதை காணமுடிகிறது. இதனால் இலங்கை தீவின் ஆட்சியாளருடன் நெருக்கமாகவும் பொருளாதார நெருக்கடியில் ஏற்பட்டுள்ள இலங்கைத் தீவை மீட்பதிலும் அதிக கவனம் கொண்டு இந்தியா செயல்பட்டு வருகின்றது.



இலங்கையின் ஆட்சியாளர்களும் அத்தகைய சூழலை ஊக்குவித்து வருகின்றனர். இதன் பிந்திய நிலையை அவதானித்தால் இலங்கை ஆட்சியாளர்கள் இன்னோர் கட்டத்தை நோக்கி நகருகின்றதைக் காண முடிகின்றது.





நிலமையை எட்டுவதற்காக இலங்கை தனது பொருளாதாரத்தை இந்தியாவுடன் இணைக்க முயலுகின்றது என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார்.



அவர் இலங்கை அரசாங்கம் தனது பலவீனமான பொருளாதாரத்தை இந்தியாவுடன் ஒருங்கிணைப்பதில் மூலோபாய உறவை ஆரம்பித்துள்ளது எனவும் எட்டுத் துறைகளில் அத்தகைய நகர்வை ஆரம்பித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.



அதாவது சக்திவளம், சுத்திகரிப்புக்கான ஆற்றல், மின்சாரம், துறைமுகம், தகவல்துறை, சுற்றுலாத்துறை,தொடர்பாடல் தொழிநுட்பம், மற்றும் பெருந்தோட்டத் துறையில் இந்திய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு எனவும், அதற்கான அணுகுமுறைகளை மேற்கொள்ள இலங்கை ஆட்சியாளர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதாரம் என்பது பிரமாண்டமானது.





அதன் வளர்ச்சிக்கான அனுபவத்தை இலங்கை பகிர்ந்து கொள்வதுடன் இந்தியப் பொருளாதாரத்துடன் இணைவதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை பயனுடையதாக மாற்ற முடியும் எனவும் மொறகொட தெரிவித்துள்ளார்.



இது ஒரு ஊக்குவிப்பு பொருளாதாரமாக தெரிகிறது. இந்திய முதலீட்டாளர்கள் எமது பிராந்திய முதலீட்டாளர்கள். அதனால் எங்கள் யோசனைகளை கருத்தில் கொள்வதுடன் வெற்றிகரமான இணைப்பாகவும் வெற்றி - வெற்றி நிலையாகவும் அமையும் என மேலும் தெரிவித்துள்ளார்.



திருகோணமலை எண்ணெய் குதங்கள் கைமாற்றுவதற்கான திட்டமானது ஆரோக்கியமான ஒன்றிணைப்பாக அமைந்துள்ளது. அதே போன்று எல்லை கடந்த மின்சாரத்திட்டம் என்பது தீவை இந்தியாவுடன் ஒன்றிணைக்கு முயற்சியாகும்.



இவ்வாறே சுற்றுலாத்துறையினால் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களையும் அதனால் இலங்கை அடையவுள்ள நன்மைகளையும் தூதுவர் முதன்மைப்படுத்தியுள்ளார்.



இரு தரப்பு கூட்டு விரிவாக்கத்தில் இராணுவப்பயிற்சிகள் ஆய்வுகள் உயர்மட்ட இராணுவப்பரிமாற்றங்கள் பரா இராணுவப் பயிற்சிகள் மற்றும் பொலிஸ் பயிற்சித் திட்டங்கள் எனபனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.



அது மட்டுமன்றி கொழும்பு ஏற்கனவே இந்தியாவுடன் இந்து சமுத்திர பாதுகாப்பு விடயங்களில் மூலோபாய ஒத்துழைப்பினை கொண்டுள்ளது. இதனை மேலும் பாதுகாப்பு விடயங்களில் விரிவுப்படுத்தும் விதத்தில் மூலோபாய ஒத்துழைப்பினை அதிகரித்து வருகின்றது.





இத்துடன் வான்வழி கடல் வழி ஒன்றிணைப்புக்கான மூலோபாயத்தையும் தூதுவராலயம் ஏற்படுத்தும் எனவும் அதன் வழி பாரிய பொருளாதார முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் ஏற்படும் எனவும் குறித்துரைத்துள்ளார் .



இலங்கைக்கான இந்தியத் தூதுவர் மிலிந்த மொறகொட. இரண்டாவது மறுபக்கத்தில் ஈழத்தமிழர்களது அரசியல் தலைமைகளது இந்தியா தொடர்பிலான நகர்வுகளை அவதானிப்பது அவசியமானது.



குறிப்பாக 13 வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக ஒரணியும் எதிராக இன்னோர் அணியும் என்ற வடிவத்தை தமிழர் மத்தியிலுள்ள ஒரு தரப்பு வெளிப்படுத்தி வருகின்றது.



இதனை நிராகரிக்கும் தமிழ் தேசிய கட்சிகளின் தரப்பு 13 ஐக் கடந்து சமஷ;டியை நோக்கிய நடவடிக்கைக்கான கடிதத்தையே இந்தியப் பிரதமருக்கு அனுப்பியதாக குறிப்பிடுகின்றது.



எது எவ்வாறாயினும் இந்தியாவுக்கு ஆதரவு எதிர் எனும் இரு வடிவம் ஈழத்தமிழர் மத்தியில் எப்போதும் காணப்படும் ஓரம்சமாகவே உள்ளது. இது ஆயுதப் போராட்ட காலப்பகுதியிலும் காணப்பட்டது.



இலங்கைத்தீவின் புவிசார் அரசியலையும் பூகோள அரசியலையும் அதிகம் உச்சரிக்கும் தமிழ் தரப்பே புவிசார் அரசியலை கவனத்தில் கொள்ளாது செயல்படுவதாக குற்றச்சாட்டுள்ளது.



ஆனால் இந்தியாவும் தென் இலங்கை அரசியலுடன் கைகோர்த்துக் கொண்டு ஈஈழத்தமிழரின் வாய்ப்புக்களை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது என்ற குற்றச்சாட்டை நிராகரித்து விட முடியாது.





ஆனால் அது அனைத்தும் இந்தியாவின் நலன்களுக்குட்டபட்டதென்பதே அரசியல் யதார்த்தமாகும். இந்தியாவை அணுகாத ஈழத்தமிழ் தரப்பு எதனை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்பதே முக்கியமானது.



இலங்கைத் தமிழரது அரசியல் புவிசார் அரசியல் சூழலை மீறி செயல்பட முடியாது என்ற உண்மையை ஆயுதப் போராட்டம் தெளிவுபடுத்திவிட்டுச் சென்றதை மறுக்க முடியாது. அதனோடு ஒப்பிடும் போது தந்திரோபாயமே ஈழத்தமிழரது பிரதான அரசியல் ஆயுதமாக உள்ளது.



அதில் அரசுகளையும் நட்புச் சக்திகளையும் அரவணைப்பதும் உரையாடுவதும் அத்தகைய அரசுகளது நலன்களுடன் ஈழத்தமிழரது நலன்களை பொருத்திக் கொள்வதும் பிரதானமானது.



அதற்கான உத்திகளை வகுப்பதை விடுத்து தனித்தனியாக அரசியல் கட்சிகள் மட்டுமல்ல மக்களையும் அணி திரட்டுவது மோதவிடுவதும் இயல்பான அரசியலாக மாறி வருகின்றது.



இது ஒரு போதும் ஆரோக்கியமான அரசியலை தந்துவிடாது. மாறாக இரு தரப்பு அண்மையில் மேற்கொண்ட விடயங்களில் கலந்து கொண்டு தமது எணணங்களை முதன்மைப்படுத்தி அந்த விடயத்தின் தன்மையை பலப்படுத்தியிருக்க முடியும்.



அதற்கான ஜனநாயக வெளி அவர்களிடமே இருந்தது. இரு தரப்புமே அரசியல் இலாபங்களை கணக்குப் போட்டுச் செயல்படுவது போலவே இயங்குகின்றன.



ஆரம்பத்தில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்த தரப்புக்கு எதிராக தொடங்கப்பட்டது போல் தமிழ் தேசிய கட்சிகளது நகர்வு அமைந்தது போல் காட்டப்பட்டாலும் பின்பு அதனை புரிந்து கொண்டு நகர்ந்த தரப்பு ஒன்று சேரும் முயற்சியில் வெற்றி கண்டது.



ஆனாலும் அதில் ஒரு தரப்பு எப்போதும் போல் வெளியே நின்றதுடன் தனக்கான வாதத்தை தனித்துவமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக புதிய கருத்தியலை வெளிப்படுத்தியது அதன் வாதம் சரியானதாக இருந்தாலும் அதன் அணுகுமுறை வழமை போன்றே தமிழ் மக்களது அரசியல் அபிலாசையை எட்டுவதாக இல்லாது எதிர்ப்புக்களையும் விரோதங்களையும் வளர்ப்பதாகவே தெரிகிறது.



எல்லா தமிழ் கட்சிகளும் சமஷ;டிக் கோரிக்கை என்றும் தமிழ் தேசியம் என்றும் பேசுகிறார்களே அன்றி அதனை அடைவதற்கான வழிமுறைகளை கண்டு கொள்வதாக தெரியவில்லை.





13 என்பது அதிகாரம் எதுவும் இல்லாத வெறுமையான நிறுவனம் மட்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. ஆனால் அத்தகைய பலவீனத்தில் இருந்து கொண்டு பலத்தை நோக்கி நகரவே முடியாத அரசியலால் எதிர்காலத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பது வெளிப்படையான யதார்த்தமாகும்.



எனவே இந்தியா அல்ல எந்த நாடும் எதனையும் தமிழ் மக்களுக்கு ஒப்படைக்காது. 13 வது திருத்தத்திலுள்ள அனைத்து அதிகாரத்தையும் தென் இலங்கை ஆட்சியாளர்கள் தமது உபாயத்தினாலும் தந்திரத்தாலும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.



அதனை இந்தியா கண்டுகொள்ளாத நிலையும் யதார்த்தங்களாகும். இத்தகைய யதார்த்தத்துக்குள் புதிதாக ஒர் அரசியலமைப்பும் அதில் 13 பலவீனமான பக்கங்களை அப்படியே வரைபில் கொண்டு வரும் முயற்சிகளும் நிறைவேறவுள்ளது.



இதுவரை அமைதியாகவும், கௌரவமாகவும் எதையும் அலட்டிக்கொள்ளாது இருந்துவிட்டு புதிதாக புறப்படுவது போல் இந்தியப் பிரதமருக்கு கடிதமும் அதற்கு எதிரான போராட்டமும் அரங்கேற்றப்படுகின்றது. இது ஒட்டுமொத்த தமிழரையும் ஏமாற்றும் செயலாகவே தெரிகின்றது.



மேற்குறித்த எதிலும் தமிழ் அரசியல் கட்சிகளால் எந்த மாற்றமும் ஏற்படுத்த முடியாது. அத்தகைய நிலைக்குள் அவர்களது அரசியல் இருப்பும் அவாவும் தமிழ் மக்களை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை