Skip to main content

சண்டை நிறுத்தத்துக்கு பிறகு காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வான்வழி தாக்குதல்!

Jun 17, 2021 139 views Posted By : YarlSri TV
Image

சண்டை நிறுத்தத்துக்கு பிறகு காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வான்வழி தாக்குதல்! 

சண்டை நிறுத்தத்துக்கு பிறகு முதல் முறையாக காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வான்வழி தாக்குதலை நடத்தியது.



மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான இந்த மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் நகரம் இருந்து வருகிறது. இந்த நகரம் யாருக்குச் சொந்தம் என்பதில்தான் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் நீடிக்கிறது.



இந்த சூழலில் கடந்த மாதம் முதல் வாரத்தில் ஜெருசலேம் நகரில் அல் அக்சா மசூதி அமைந்துள்ள பகுதியில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் போலீசாருக்கும் இடையே கடுமையான மோதல் சம்பவங்கள் அரங்கேறின.



அதனைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் போராளிகள் அல் அக்சா மசூதி பகுதியில் இருந்து இஸ்ரேல் படைகள் விலக வேண்டும் என எச்சரிக்கும் விதமாக இஸ்ரேல் நகரங்கள் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்கினர்.‌ இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா நகர் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது.



கடந்த மாதம் 10-ந் தேதி இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட இந்த சண்டை இடைவிடாமல் 11 நாட்களுக்கு தொடர்ந்தது. இதில் இரு தரப்பிலும் சேர்த்து 250-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த உயிரிழப்பில் பெரும் பகுதி காசாவில் நிகழ்ந்தது.



இருதரப்பு மோதலில் அப்பாவி மக்கள் உயிரிழப்பது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்திய நிலையில், சர்வதேச சமூகம் கொடுத்த அழுத்தத்தின் பேரில் கடந்த மாதம் 21-ந் தேதி இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. இதனால் காசாவில் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருந்தது.



இந்தநிலையில் ஹமாஸ் போராளிகளின் கடும் எதிர்ப்பை மீறி ஜெருசலேம் நகரில் யூதர்கள் நேற்று முன்தினம் பேரணி நடத்தினர்.



இதனால் கோபமடைந்த ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலின் தெற்கு நகரங்களை குறிவைத்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட பலூன்களை பறக்க விட்டனர்.



இந்த பலூன்கள் தரையில் விழுந்து வெடித்ததில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பற்றியதாக இஸ்ரேல் தீயணைப்பு துறை தெரிவித்தது.



இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை காசா நகரில் ஹமாஸ் போராளிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியது.



ஹமாஸ் போராளிகளின் பயிற்சி மையங்கள், பதுங்கு குழிகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து போர் விமானங்கள் 10 நிமிடங்களுக்கும் மேலாக குண்டு மழை பொழிந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேசமயம் இந்த வான்வழி தாக்குதலால் காசா நகரில் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றி இஸ்ரேல் ராணுவம் குறிப்பிடவில்லை.



சண்டை நிறுத்தத்துக்கு பிறகு இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பெரிய மோதல் இதுவாகும். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை