Skip to main content

கொரோனாவால் இறந்த 2 பேரின் உடல்களை மாற்றிக் கொடுத்ததால் குழப்பம்!

Apr 15, 2021 167 views Posted By : YarlSri TV
Image

கொரோனாவால் இறந்த 2 பேரின் உடல்களை மாற்றிக் கொடுத்ததால் குழப்பம்! 

கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை உருவாகி உள்ளது. கடலூர் அரசு மருத்துவமனையில், புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தத்தை சேர்ந்த ஜாகீர் உசேன்( 60), பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை சேர்ந்த ஆறுமுகம் (52) ஆகியோர் கொரோனா சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி இருவரும் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இருவரின் உடல்களும் கொரோனா விதிகளை பின்பற்றி பாலிதீன் உறைகளால் பேக்கிங் செய்து, வைத்திருந்தனர்.  புவனகிரியில் இருந்து வந்த ஜாகீர்உசேன் உறவினர்களிடம் ஆறுமுகத்தின் சடலத்தை தவறுதலாக மருத்துவமனை ஊழியர்கள் ஒப்படைத்துள்ளனர். அவர்களும் ஆதிவராக நத்தம்  கிராமத்துக்கு ஆறுமுகத்தின் சடலத்தை கொண்டு சென்று இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்துவிட்டனர்.



இதேபோல் ஆறுமுகத்தின் உறவினர்களிடம் ஜாகீர்உசேனின் உடல் மாற்றி ஒப்படைக்கப்பட்டது. அந்த  உடலை மருத்துவமனையில் பெற்றுக்கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து சென்ற உறவினர்கள், வழியில் முகத்தை பார்த்தபோது, அது ஆறுமுகத்தின் உடல் இல்லை என்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் மீண்டும் சடலத்தை கடலூர் அரசு மருத்துவமனைக்கே கொண்டு வந்தனர்.  அப்போதுதான் உடல்களை மாற்றி ஒப்படைத்தது மருத்துவமனை ஊழியர்களுக்கு தெரியவந்தது.  ஆறுமுகத்தின் உறவினர்கள் சடலத்தை ஏற்றிக்கொண்டு ஆதிவராகநத்தம் கிராமத்துக்கு கொண்டு சென்றனர். ஜாகீர்உசேன் உறவினர்களிடம் சடலம் மாறிய தகவலை தெரிவித்தனர். ஆனால் அதற்குள் ஆறுமுகத்தின் உடலை இஸ்லாம் முறைப்படி அடக்கம் செய்துவிட்டதாக தெரிவித்தனர். புதைக்கப்பட்ட உடல் ஜாகீர்உசேன் அல்ல, ஆறுமுகம்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.



இதையடுத்து, மருத்துவமனையின் தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த  தாசில்தார் அன்பழகன், இரு தரப்பு உறவினர்களிடம் பேச்சு நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டு  ஜாகீர்உசேன் உடல், ஏற்கனவே புதைக்கப்பட்ட ஆறுமுகத்தின் சடலத்துக்கு  அருகில் புதைத்தனர். அதேநேரத்தில் ஆறுமுகத்தின் சடலத்தை தோண்டியெடுத்து  தங்களிடம் ஒப்படைக்குமாறு அவரது உறவினர்கள் போர்க்கொடி தூக்கினர். ஏற்கனவே உடலை தோண்டி எடுத்தால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதனை உறவினர்கள் ஏற்கவில்லை.  இதனை தொடர்ந்து, தவறுதலாக புதைக்கப்பட்ட ஆறுமுகத்தின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  இந்த  உடலை பெற்றுக்கொண்டு புதுப்பேட்டைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.



மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் ரமேஷிடம் தெரிவிக்கும்போது, ‘‘உறவினர்கள் தவறுதலாக அடையாளம் காட்டியதால் இந்த தவறு நடந்துள்ளது. ஆறுமுகத்துக்கு கொரோனா நெகடிவ் என்று வந்துள்ளதால், சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டோம்.  இருப்பினும் தவறு நடந்திருப்பது தெரியவந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

16 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை