Skip to main content

தடுப்பூசி பிரச்சினையால் தடுப்பூசி போடும் பணியில் பாதிப்பு இல்லை - உலக சுகாதார நிறுவனம்

Mar 17, 2021 240 views Posted By : YarlSri TV
Image

தடுப்பூசி பிரச்சினையால் தடுப்பூசி போடும் பணியில் பாதிப்பு இல்லை - உலக சுகாதார நிறுவனம் 

அஸ்ட்ராஜெனேகா கொரோனா தடுப்பூசி மேற்கத்திய நாடுகளில் பிரச்சினைக்குள்ளாகி இருக்கிறது. இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட சிலருக்கு ரத்தநாளங்களில் ரத்தம் உறைந்து விடுவதாக தகவல்கள் வந்தன. ஆஸ்திரியாவில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் செய்தி வெளியானது. இது மேற்கத்திய நாடுகளில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. தடுப்பூசியின் மீது தயக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ். இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் இந்த தடுப்பூசி போடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.



உலக சுகாதார நிறுவனம் தனது கோவேக்ஸ் உலகளாவிய தடுப்பூசி திட்டத்தின்கீழு், குறைந்த, நடுத்தர வருமான நாடுகளுக்கு, இந்தியா, தென் கொரியாவில் தயாராகிற தடுப்பூசிகளை அனுப்புகிறது. அதே நேரத்தில் ஐரோப்பாவில் தயாராகிற இந்த தடுப்பூசிகளை அனுப்புவதை நிறுத்தி உள்ளது.



இது முன் எச்சரிக்கை நடவடிக்கை என்று உலக சுகாதார நிறுவனத்தின் உதவி தலைமை இயக்குனர் மரியேஞ்சலா சிமாவோ கூறினார். அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியால் எழுந்துள்ள பிரச்சினையால் உலகளாவிய தடுப்பூசி திட்டம் பாதிக்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.



இதையொட்டி உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ், ஜெனீவாவில் நிருபர்களிடம் பேசுகையில், “இந்த நிகழ்வுகளெல்லாம் தடுப்பூசிகளுடன் இணைந்தவை என்று அர்த்தம் கொள்ளத்தேவையில்லை. பிரச்சினை என வருகிறபோது அதன்மீது விசாரணை நடத்துவது என்பது வழக்கமான நடைமுறை. இது கண்காணிப்பு அமைப்பு வேலை செய்கிறது, பயனுள்ள கட்டுப்பாடுகள் உள்ளன என்பதையே காட்டுகிறது” என குறிப்பிட்டார்.



உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியான டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், “உலகமெங்கும் 30 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அவற்றினால் ஒருவருக்கு கூட மரணம் நேரிட்டதாக ஆவணப்படுத்தப்படவில்லை. அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி போட்டதால் ரத்தம் உறைவதாக கூறப்பட்டதில், உண்மையில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட குறைவான விகிதத்தில்தான் நேர்ந்துள்ளது” என தெரிவித்தார்.



உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ்


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை