Skip to main content

ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

Sep 09, 2020 280 views Posted By : YarlSri TV
Image

ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்! 

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுகவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். தமிழக மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக் கோரியும் செப்டம்பர் 8ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ ஆகியோர் அறிவித்திருந்தனர். அதன்படி தமிழகம் முழுவதும் திமுகவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அவரவர் வீட்டு வாசல் முன்பாக சமூக விலகல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து நீட், ஆன்லைன் வகுப்பு குளறுபடிக்கு எதிரான கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகை, கருப்பு கொடியினை கைகளில் ஏந்தி, கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். இதில் மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ, தாயகம் கவி எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் சிற்றரசு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தின் போது உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி: தமிழக முதல்வராக கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் இருந்த போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஓபிஎஸ், இபிஎஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் நீட்டை மத்திய அரசு திணித்து வருடா வருடம் உயிர் பலி போய் கொண்டிருக்கிறது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, கவுன்சலிங் முறையில் மாணவர் சேர்க்கையை கொண்டுவர வேண்டும். ஆன்லைன் வகுப்பு நடத்துவது மாணவர்களுக்கு புரியவில்லை. புரியவில்லை என்று என்று ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். எனவே ஆன்லைன் வகுப்பை தொலைக்காட்சி மூலமாக நடத்தலாம்.



ஆன்லைன் வகுப்பில் நிறைய பிரச்னை உள்ளது. அதனை சரி செய்யும் வகையில் தொலைகாட்சி மூலமாக வகுப்பு நடத்த வேண்டும். கல்வியை வைத்து கொண்டு இந்த அரசு மாணவர்களிடம் விளையாடி கொண்டிருக்கிறது. மாணவர்களை ஒட்டு மொத்தமாக குழப்பத்தில் வைத்திருக்கிறார்கள். மாணவர்களின் கல்வியில் விளையாட வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், பகுதி செயலாளர் மா.பா.அன்புத்துரை, பொதுக்குழு உறுப்பினர் வி.எஸ்.ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  



சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள மாவட்ட செயலாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் ஓட்டேரி செல்லப்பா தெருவில் மாவட்ட செயலாளர் பி.கே.சேகர் பாபு எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எம்.கே.பி.நகர் திருவள்ளூர் சாலையில் பெரம்பூர் எம்எல்ஏவும், மாநில இளைஞர் அணி துணை செயலாளருமான ஆர்.டி.சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்ட செயலாளர் பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொளத்தூர் ஜி.கே.எம். 21வது தெருவில் இளைஞர் அணி அமைப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சித்திக், வட்ட செயலாளர் வெங்கடஷே் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் மாதவரம் பஜார் வீதியில் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே போல தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஓபிஎஸ், இபிஎஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் நீட்டை மத்திய அரசு திணித்து வருடா வருடம் உயிர் பலி போய் கொண்டிருக்கிறது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை