Skip to main content

சென்னையில் 3,300 பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் பஸ்கள் ஓடுகின்றன!

Sep 01, 2020 252 views Posted By : YarlSri TV
Image

சென்னையில் 3,300 பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் பஸ்கள் ஓடுகின்றன! 

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, பல்வேறு முக்கிய தளர்வுகளுடன் 8-வது முறையாக ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை அமலில் உள்ளது. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் மக்களின் பயன்பாட்டுக்கு பெரிதும் உதவும் பஸ் போக்குவரத்து அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.



இதனால், ஓய்வு இன்றி ஓடிய பஸ்கள் பணிமனைகளில் முடங்கி ஓய்வு எடுத்து வந்தன. இந்த நிலையில், கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் பஸ்கள் இயக்கப்பட்டன. இது தமிழகம் முழுவதும் 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அந்தந்த மண்டலங்களுக்குள் மட்டும் பஸ்கள் இயங்கி வந்தன.



இந்த நிலையில், பஸ்கள் இயக்கப்பட்ட காலகட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு தவிர்த்து பிற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று வேகமாக பரவியது. அதைத் தொடர்ந்து ஜூன் 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை மண்டலங்களுக்குள் இயக்கப்பட்ட பஸ்கள் மாவட்டங்களுக்குள் மட்டும் இயக்கப்பட்டன. பின்னர், ஜூலை 1-ந் தேதி முதல் அனைத்து பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன.



அதே நேரத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 160 நாட்களாக பஸ்கள் இயக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த முக்கிய தளர்வுகளில் ஒன்றாக மாவட்ட எல்லைகளுக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.



அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மாவட்ட எல்லைகளுக்குள் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை 33 பணிமனைகளில் இருந்து மொத்தம் 3 ஆயிரத்து 300 மாநகர பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் அனைத்தும் சென்னை மாவட்ட எல்லை வரை இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.



இதுவரை பணிமனைகளில் ஓய்வு எடுத்து வந்த பஸ்கள் நேற்று சுத்தம் செய்யப்பட்டு, டயர்களுக்கு காற்று அடைக்கப்பட்டு, பேட்டரிகள் சார்ஜ் செய்யப்பட்டு இயங்குவதற்கு தயார் செய்யப்பட்டன. 160 நாட்களுக்கு பின்னர் இயக்கப்படும் பஸ்களில் 22 முதல் 24 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். அதாவது, ஒரு இருக்கைக்கு ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே இனிமேல் பயணிகள் முண்டி அடித்துக்கொண்டோ, படிகளில் தொங்கியபடியோ பயணிக்க முடியாது.



பயணிகள் பஸ்களில் பின்பக்கமாக ஏறி முன் பக்கமாக இறங்க வேண்டும். பின்பக்கம் ஏறும் போது பட்டிக்கட்டின் பக்கவாட்டில் கிருமிநாசினி வைக்கப்பட்டு இருக்கும். பயணிகள் அந்த கிருமிநாசினியை பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மேலும், பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். முகக்கவசம் அணியாத பயணிகள் பஸ்களில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், பயணிகள் பஸ்களில் இருந்து எச்சில் துப்புவதற்கும் அனுமதிக்கப்படுவது இல்லை.



இதே போன்று, பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கைகளில் கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்து கொண்டு தான் பஸ்களை இயக்க வேண்டும். மேலும், பஸ்கள் பணிமனைகளில் இருந்து புறப்படும் போதும், இரவு பணிமனைக்கு வரும் போதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்படும் என்றும், பயணிகளை ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு முறையும் பஸ் நிலையங்களில் வைத்து கிருமிநாசினி தெளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



சென்னையில் இருந்து பிராட்வே, கோயம்பேடு போன்ற முக்கியமான இடங்களில் இருந்து திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை மாவட்ட எல்லைக்குள் மட்டுமே பஸ்கள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



இன்று முதல் தனியார் நிறுவனங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் போக்குவரத்து அதிகரிக்கும். இதுவரை மோட்டார் சைக்கிள்கள், கார்களில் பயணித்த ஏராளமான பயணிகளும் இன்று பஸ் போக்குவரத்தை பயன்படுத்துவார்கள். மக்கள் போக்குவரத்தில் பிரதான போக்குவரத்துகளில் ஒன்றான மின்சார ரெயில் போக்குவரத்தும் இல்லை என்பதால் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



மாநிலம் முழுவதும் மாவட்டங்களுக்குள் இயக்கப்படும் பஸ் போக்குவரத்து குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-



விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் (விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர்) 3 ஆயிரத்து 437 பஸ்களும், சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் (சேலம், தர்மபுரி) 2 ஆயிரத்து 497 பஸ்களும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்து கழகத்தில் (கோவை, ஈரோடு, திருப்பூர், ஊட்டி) 3 ஆயிரத்து 158 பஸ்களும், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் (கும்பகோணம், திருச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கரூர்) 3 ஆயிரத்து 601 பஸ்களும், மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் (மதுரை, திண்டுக்கல், விருதுநகர்) 2 ஆயிரத்து 262 பஸ்களும், திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தில் (நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி) ஆயிரத்து 775 பஸ்களும் என சென்னை உள்பட மொத்தம் மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்து 30 பஸ்கள் ஓடுகின்றன.



இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

16 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை