Skip to main content

சென்னையில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டதால், சரக்கு வாங்க குடிமகன்கள் கூட்டம்!

Aug 18, 2020 248 views Posted By : YarlSri TV
Image

சென்னையில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டதால், சரக்கு வாங்க குடிமகன்கள் கூட்டம்! 

சென்னையில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டதால், சரக்கு வாங்க குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது.



சமூக இடைவெளியை மறந்து கூட்டம், கூட்டமாக டாஸ்மாக் கடைகள் முன்பு குடிமகன்கள் குவிந்ததால் சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.



இதனால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக கூறி சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து மாநிலம் முழுவதும் கடந்த மே 7ம் தேதி முதல் 3,700 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.



இதனால் தான் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இந்த நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.



இதனால், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை  திறக்க அரசு முடிவு செய்தது.



அதன்படி, இன்று முதல் சென்னையில் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.



தொடர்ந்து, நேற்று டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான ஏற்பாடுகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். புதிய மதுவகைகள் குடோன்களில் இருந்து கடைகளுக்கு இறக்குமதி செய்யப்பட்டன.



கடைகளுக்குள்ளும், கடைகள் முன்பும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.



சில கடைகள் முன்பு 1 மீட்டர் இடைவெளியில் கட்டங்கள், சாமியானா பந்தல் மற்றும் மைக் செட் போடப்பட்டது.



இதற்கிடையே கடை ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டது.



அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க வேண்டும். 



கடையின் சுற்றுப்புறத்தை பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பணியாளர்கள் காட்டன் கையுறை, மாஸ்க் மற்றும் பேஸ் சீல்டு அணிந்து பணிபுரிய வேண்டும்.



வாடிக்கையாளர்கள் சானிடைசரால் கைகளை சுத்தம் செய்த பின்னரே கவுன்டரில் அனுமதிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பதால், கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.



இந்த எதிர்ப்புக்கு மத்தியில், 5 மாதத்திற்கு பிறகு இன்று காலை 10 மணியளவில் மால்கள், வணிக வளாகங்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து சென்னையில் 720 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.



காலை முதலே மதுபாட்டில் வாங்க டாஸ்மாக் கடைகள் முன்பு குடிமகன்கள் கூட்டம், கூட்டமாக காத்திருந்தனர். சரியாக காலை 10 மணிக்கு கடை திறந்தவுடன், டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.



ஒரு மணி நேரத்திற்கு 50 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. இதனால், டோக்கனை வாங்க குடிமகன்கள் முண்டியடித்தனர். இந்த கூட்டத்தை சமாளிக்க ஒவ்வொரு கடை முன்பு 2 போலீசார் பாதுகாப்பு பணியில் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு உதவியாக கடைகளின் ஊழியர்களும் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி, குடிமகன்களை வரிசையாக நிற்க வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



பலரும் டோக்கன் வாங்கும் ஆர்வத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. அதே நேரத்தில் முக கவசம் அணியாமல் கடைக்கு வந்தவர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.



இந்த நிலையில் பல இடங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததாலும், சமூக இடைவெளியை பின்பற்ற தவறியதாலும், டாஸ்மாக் கடைகள் முன்பு பதற்றமான சூழல் நிலவியது. கூட்டத்தை கட்டுப்படுத்த அவ்வபோது மைக் மூலமாக ஊழியர்கள் குடிமகன்களுக்கு அறிவுரை வழங்கிய வண்ணம் இருந்தனர்.



டாஸ்மாக் கடைகளில் ஒரு மணி நேரத்திற்கு 50 பேர் வீதம் டோக்கன் வழங்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டது.



கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடிமகன்கள் டோக்கன் வாங்கவும் சரக்கு வாங்கவும் கடைகள் முன்பு காத்திருந்தனர்.



நீண்ட நாட்களுக்கு பிறகு கடை திறக்கப்பட்டதால் ஏராளமானோர் அதிகளவில்  மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.



டாஸ்மாக் கடை ஊழியர்கள் முகக்கவசம், கையுறை அணிந்து மதுபானங்களை விற்பனை செய்தனர்.



50 வயதிற்கும் மேற்பட்டோர் மது விற்பனையில் ஈடுபடவில்லை. ஒவ்வொரு மணிக்கு ஒரு முறை டாஸ்மாக் கடைகளை சுற்றி கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.



விற்பனையாளர்களும் சானிடைசர் போட்டு கையை கழுவிக்கொண்டனர். இது 60 சதவீத கடைகளில் பின்பற்றப்பட்டது.



அதே நேரத்தில் மற்ற கடைகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. மேலும், குடிமகன்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் குவிந்ததால் சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

7 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை