Skip to main content

மக்களவைத் தேர்தலில் 295 முதல் 335 இடங்களில் வென்று பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்: ஏபிபி-சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல்...!

Dec 27, 2023 26 views Posted By : YarlSri TV
Image

மக்களவைத் தேர்தலில் 295 முதல் 335 இடங்களில் வென்று பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்: ஏபிபி-சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல்...! 

வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், 3-வது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமா அல்லது காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.



இந்நிலையில், இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பாக ஏபிபி செய்தி நிறுவனம் மற்றும் சி வோட்டர் அமைப்பு இணைந்து, கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. டிசம்பர் 15 முதல் டிசம்பர் 21 வரையில், நாடு முழுவதும் வாக்குரிமை பெற்றவர்களிடம் இந்தக் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 295 முதல் 335 தொகுதிகளில் வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இண்டியா கூட்டணி 165 முதல் 205 இடங்களைக் கைப்பற்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



மொத்தமுள்ள 543 தொகுதிகளில், பாஜக கூட்டணி அதிகபட்சமாக வட மாநிலங்களில் 180 இடங்களில் 150 – 160 இடங்களிலும், மேற்கு பிராந்தியங்களில் 78 இடங்களில் 45 -55 இடங்களிலும், கிழக்கு பிராந்தியங்களில் 153 இடங்களில் 80 -90 இடங்களிலும், தென் மாநிலங்களில் 132 இடங்களில் 20-30 இடங்களிலும் வெல்லும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது. காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி தென்மாநிலங்களில் 70-80 இடங்களைக் கைப்பற்றும். கிழக்கில் 50-60, வடக்கில் 20-30, மேற்கில் 25-35 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துக் கணிப்பின்படி, தென்மாநிலங்கள் பாஜக கூட்டணிக்கு பெரும் சவாலாக இருக்கும். பிஹார், பஞ்சாப், மகாராஷ்டிரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இண்டியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கும். எனினும், தேசிய அளவில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும். பிரதமர் மோடியின் ஆட்சி திருப்தியளிப்பதாக 47.2 சதவீதம் பேர் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை