Skip to main content

தேசிய கூட்டணி அமைப்பது முக்கியம் - மு.க.ஸ்டாலின்

Dec 29, 2022 109 views Posted By : YarlSri TV
Image

தேசிய கூட்டணி அமைப்பது முக்கியம் - மு.க.ஸ்டாலின் 

மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த, காங்கிரசை உள்ளடக்கிய தேசிய கூட்டணி அமைவது முக்கியம்’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதில், ஆளும் பாஜவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டுமென தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், தேசிய கூட்டணி குறித்தும், அதில் காங்கிரசின் முக்கியத்துவம் குறித்தும், தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் உறவு குறித்தும், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் குறித்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு நேற்று அளித்த பிரத்யேக பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.



முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு: இமாச்சல பிரதேசத்தைத் தவிர, நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சரியாக செயல்படவில்லையே? காங்கிரசின் தொடர் தோல்விகளுக்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் அதன் மதிப்பையோ, முக்கியத்துவத்தையோ இழந்து விட்டதாக நான் எண்ணவில்லை. கட்சியை வலுப்படுத்த சோனியா காந்தி எடுத்துள்ள முயற்சிகள் இப்போது பலன் தரத் தொடங்கி உள்ளன. காங்கிரஸ் தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது பரந்த அனுபவத்தின் மூலம், கட்சியை மீண்டும் வலிமையான நிலைக்கு கொண்டு செல்கிறார். சகோதரர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம்  மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பயணம், நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை உருவாக்குகிறது. இதனால் காங்கிரஸ் தொண்டர்களின் மன உறுதி புதிய உச்சம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி மீண்டும் தனது பழைய பாதைக்கு திரும்பி உள்ளது. இது இந்தியாவுக்கு இப்போது அவசியம் தேவை.



ராகுல் காந்தியின் அரசியல் தலைமையை நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஆதரித்துள்ளீர்கள். குஜராத் தேர்தலில் தனது கட்சிக்கு பிரசாரம் செய்வதில், ராகுல் இன்னும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? பாஜவுக்கு வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுக்க, தேசிய அளவில் காங்கிரசை ராகுலால் வழிநடத்த முடியும் என்று நம்புகிறீர்களா? ராகுல் காந்தியை ஒரு நம்பிக்கைக்குரிய இளம் தலைவராகவே நான் பார்க்கிறேன். ப.சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் குஜராத் தேர்தல் முடிவுகளில் காங்கிரசின் செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து அவர்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி முன்வைக்கும் வாதங்கள் திடமானவை. அவர் பல முக்கியமான விஷயங்களில் தெளிவான அணுகுமுறையை கொண்டுள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையே அதன் ஒருமைப்பாட்டை பாதுகாக்கிறது என்பதை புரிந்து கொண்டவர் ராகுல். அவர், மத வெறுப்பு அரசியலையும், ஒரு மொழி ஆதிக்கத்தையும் எதிர்க்கிறார். அவரின் இந்த கொள்கைகள் பாஜவின் கொள்கைளுக்கு எதிரானவை. பாஜவை வெறும் தேர்தலுக்காக மட்டும் ராகுல் எதிர்க்கவில்லை. கொள்கை ரீதியாகவும் எதிர்க்கிறார். அதனால்தான் அவரை பாஜ குறிவைக்கிறது. இது உண்மையில் ராகுலில் பலத்தை காட்டுகிறது.



காங்கிரஸ் கட்சி உடனான தேர்தல் கூட்டணி இதுவரை திமுகவுக்கு எப்படி உதவியது என்று நினைக்கிறீர்கள்? காங்கிரசுடனான கூட்டணி வரும் தேர்தல்களிலும் தொடருமா? குறிப்பாக 2024ல் நடக்க உள்ள மக்களவை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா? நமது அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அரசியலமைப்பை நிறுவிய நமது தேச தலைவர்கள், நம்மிடம் ஒப்படைத்த, அதன் அடிப்படை மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாது. நமது அரசியலமைப்பு நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கு தேசிய அளவில் கூட்டணி அமைவது முக்கியம். அந்த கூட்டணி, காங்கிரஸ் உள்ளடக்கிய கூட்டணியாக இருக்க வேண்டும். தமிழகத்தில் திமுக ஏற்கனவே அப்படியொரு கூட்டணியை அமைத்துள்ளது. அந்த கூட்டணி எங்கும் செயல்படுத்தக் கூடிய வெற்றிகரமான கூட்டணி என்பதையும் நிரூபித்து காட்டி உள்ளது. இவ்வாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.



* காங்கிரஸ் கட்சி மீண்டும் தனது பழைய பாதைக்கு திரும்பி உள்ளது.

* பாஜவை வெறும் தேர்தலுக்காக மட்டும் ராகுல் எதிர்க்கவில்லை. கொள்கை ரீதியாகவும் எதிர்க்கிறார். அதனால்தான் அவரை பாஜ குறிவைக்கிறது.

* அரசியலமைப்பு நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றே நாங்கள்  விரும்புகிறோம். அதற்கு தேசிய அளவில் கூட்டணி அமைவது முக்கியம். அந்த கூட்டணி, காங்கிரஸ் உள்ளடக்கிய கூட்டணியாக இருக்க வேண்டும்.

* இது எங்கும் செயல்படுத்தக் கூடிய வெற்றிக்கூட்டணி என்பதை தமிழகத்தில் நாங்கள் நிரூபித்து காட்டி உள்ளோம். - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

18 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை