Skip to main content

மகாசங்கமே உண்மையில் எழுதப்படாத நடைமுறை அரசியல் யாப்பு

May 03, 2022 83 views Posted By : YarlSri TV
Image

மகாசங்கமே உண்மையில் எழுதப்படாத நடைமுறை அரசியல் யாப்பு 

பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கும், பேணி வளர்ப்பதற்கும், புத்த பிரானால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவே இலங்கை என்ற ""தம்மதீபக்"" கோட்பாடே மகாசங்கத்தின் அடிப்படைச் சித்தாந்தமாகும்.



அதனடிப்படையில் தமிழின அழிப்பு, இந்திய எதிர்ப்பு என்பன அதன் பிரதான நிலைப்பாடாகும்.



இன்றைய நிலையில் அரசியல் யாப்பில் பௌத்தத்தை பேணிப் பாதுகாப்பதும், வளர்ப்பதும் இலங்கை அரசின் பொறுப்பாகும் என்று திட்டவட்டமாக வரையப்பட்டுள்ளது. இலங்கை ஒரு பௌத்த நாடு என்ற பிரகடனம் இதன்மூலம் நடைமுறை ரீதியாக வலியுறுத்தப்படுகிறது.





இந்த மகாசங்கம் இலங்கையின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டதாகவும், அதன் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாகவும் உள்ளதனால் அந்த மகாசங்கத்தை எழுதப்படாத அரசியல் யாப்பு என்றே சொல்லாம்.



இதுவரைகால இலங்கையின் வரலாற்றில் இந்த மகாசங்கமே ஒரு எழுதப்படாத யாப்பு விதியாக அரசியலைத் தீர்மானித்திருக்கிறது. இதை 1959 ஆம் ஆண்டு பௌத்தத்தின் பெயரால் பண்டாரநாயக்கவை ஒரு பிக்கு கொலை செய்ததை முதன்மை உதாரணமாகக் கொள்ளலாம்.









காலிமுகத் திடல் புரட்சி: மன்னர்களின் மகுடங்களை கழற்றிய இளைஞர்கள்! லிபியாவில் கடாபிக்கு ஏற்பட்ட நிலைமை 


 



கூடவே இதற்கு முன் பண்டா - செல்வா ஒப்பந்தத்தை இருநூறு பிக்குகள் பண்டாரநாயக்கா முன் கூடி அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிய செய்ததையும் காணலாம். இவ்வாறு தமிழர்களுக்கு பேச்சளவிலேனும் தீர்வினை வழங்க சிங்கள தலைவர்கள் முயன்ற போதெல்லாம் அதற்கெதிராக சிங்களப் பேரினவாத பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்து அவற்றை நீர்த்துப்போகச் செய்ததுதான் வரலாறு.





 



மேலும் சுனாமியின் பின்னர் அரசிற்கும் - விடுதலைப் புலிகளுக்கும் இடையே பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது 5000 வரையிலான பௌத்த பிக்குகள் ஜனாதிபதி செயலகம் வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாது நீதிமன்றம் வரை சென்று தடையுத்தரவையும் பெற்று அவற்றை நீர்த்துப்போகச் செய்தனர்.



அதே பௌத்த மகாசங்கமே தமிழர்களுக்கு எதிரான போரை ராஜபக்ச அரசாங்கம் நடத்திய போது அப்போரை வழிநடத்திய அன்றைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கும், அப்போதைய பாதுகாப்பு செயலாளராகவும், இன்றைய ஜனாதிபதியாகவும் உள்ள கோட்டாபய ராஜபக்சவிற்கும் பிரித் ஓதி அவர்கள் கையில் மந்திர நூல்கட்டி தமிழின அழிப்பிற்கு ஆசீர்வதித்து அனுப்பிய தோடல்லாமல், தமிழர்கள் மீது துண்டுமழை பொழிந்த பீரங்கிகளின் குழல்களுக்கும் மந்திர நூல்கட்டி பிரித் ஓதி தமிழர்களை கொல்வதற்கு ஆசீர்வதித்து அனுப்பியதும் இதே பௌத்த பீடந்தான்.





இன்றும் அதே பௌத்த மகாசங்கமே கோட்டாபய ராஜபக்சவை பதவியில் அமர்த்தி இன்றுவரை ராஜபக்ச குடும்பத்தினரை பாதுகாக்கிறது.





தமிழர்களுக்கு எதிரான போரைத் மகிந்த ராஜபக்சவின் ஆஸ்தான குருவாக இருந்த ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்க, அத்துரலிய ரத்ன தேரர் முதலானவர்கள் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என இனவாதம் பேசி போரைத் தூண்டுவித்து போரின் பின்னர் இரத்தம் படிந்த இராணுவத்தையும், ராஜபக்ச குடும்பத்தினரையும் பாதுகாத்து ஆட்சிப் பீடமேற்றி இன்றுவரை பாதுகாப்பதோடல்லாமல், தாமும் நாடாளுமன்றம் சென்று இன்றுவரை இனவாதத்தை தூண்டிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் மறைமுகமாக மகிந்தவிற்கு ஆதரவை வழங்கிக் கொண்டு சகட்டு மேனிக்கு மகிந்த பதவிவிலக வேண்டும் என்று கூச்சலிடுகின்றனர். இதுதான் மகாசங்க மனநிலை.









முக்கிய கூட்டங்களில் பசில்: ஆட்டங்காணுமா கொழும்பு அரசியல்...! 


இதை இன்னுமொரு வழியில் விளக்கினால் ஜனாதிபதியை வீட்டுக்குச் செல்லுமாறும், பிரதமரை பதவி விலகுமாறும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் நிலையில் தமிழருக்கு எதிரான போரில் பச்சைக் கொடிகாட்டி ஆசீர்வதித்த அதே மகாசங்க பிக்குகளே கோட்டாபய ராஜபக்சவை பாதுகாக்கின்றனர்.



கடந்த 20 ஆம் திகதி சியாம், இராமணிய, அமரபுர நிகாயங்களும், அஸ்கிரிய மல்வத்த பீடங்களும் இணைந்து 20 ஆவது சீர்திருத்த சட்டத்தை நீக்கி 19 வது சீர்திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் இல்லாதவிடத்து சங்க ஆணையை பிறப்பிக்க வேண்டிவருமென பௌத்த மகாசங்கம் அறிக்கை வெளியிட்டது.





இதன் பின்னர் 25.04.22 திகதி தேசிய பிக்கு நிபுணர்கள் மன்றம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. முக்கியமான அக்கடிதத்தில் கடந்த 20.04.22 நான்கு பௌத்த பீடங்களும் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்திய அரசமைப்பு திருத்த விடயத்தில் (20 தை நீக்கி 19 பாதை நடைமுறைப்படுத்தல்) நாம் இணங்கவில்லை என்றும், புதிய அரசமைப்பினூடாக நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என்று சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தில் குறிப்பிடப்பட்டதனால்தான் கோட்டாபய ராஜபக்சவை நாட்டுமக்களும், மகாசங்கமும் தெரிவு செய்து அதற்கமையவே 20 வது சீர்திருத்த சட்டம் முன்வைக்கப்பட்டது. இதன்போது விரைவில் புதிய அரசமைப்பு வருமென மக்களும், மகாசங்கத்தினரும் நம்பினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 



 மேலும் அந்த தேசிய பிக்கு நிபுணர்கள் மன்ற கடிதத்தில் தற்போதைய சூழ்நிலையில் துரித அரசியலமைப்பு திருத்தத்திற்கான தேவை ஏற்படவில்லையென்றும், மக்களும் அக்கோரிக்கையை முன்வைக்கவில்லையென்றும் . இதனால் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் முன்னேற்றத்திற்காக அன்றி மாயைக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.





எனவே நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக செயல்படுவதற்கு இடையூறு ஏற்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் அரசமைப்பு திருத்தச் சட்டத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றமை பிறிதொரு சஜித் திட்டத்திற்கேயாகும்.





19வது சீர்திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது நீதிமன்றத்தைப் புறக்கணித்து தெரிவுக்குழுவில் 40 இற்கும் மேற்பட்ட திருத்தங்களை முன்வைத்த சூழ்ச்சியாளர்கள் இத்திருத்தத்தின் பின்னணியிலும் உள்ளனர்.



அத்துடன் 13 வது சீர்திருத்த அரசமைப்பு திருத்தத்தைக் கோருவதனூடாக பிரிவினை வாதத்திற்கு எதிராக காணப்படும் தடைகளை நீக்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.





இரண்டரை ஆண்டுகளாக புதிய அரசமைப்பை முன்வைக்காமை தொடர்பில் கேள்வி கேட்காதவர்கள், பிரிவினை வாதிகளின் அழுத்தங்கள் மூலம் பிரிவினை வாதத்திற்கான தேவையை நிறைவேற்றிக்கொள்ள இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தக் கூடும். பிரிவினை வாதத்திற்கு எதிராக 30 ஆண்டுகாலமாக நாம் செய்த அர்ப்பணிப்புக்கள் அனைத்தையும் தோல்வியடையச் செய்து அரசமைப்பின் வசனங்களில் மாற்றத்தைச் செய்து பிரிவினை வாதிகளின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடும். இதற்கு ஒரு போதும் இடமளிக்கக கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தானது மகாசங்கத்தின் மனேநிலையை தெளிவுபடுத்துகிறது.





மேலும் அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதானது நாடு, தேசம். பௌத்த சாசனம் என்ற ரீதியில் செயற்படும் மகாநாயக்க தேரர்களுக்கு பொய்யான தகவல்களை வழங்கி தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் மோசடி செய்பவர்களை அடையாளம் காண இது ஒரு சந்தர்ப்பமாகும். அதற்கிணங்க தற்போதைய நெருக்கடியைத் தணிக்க சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தை உண்மையாகவும், முறையாகவும் நடைமுறைப்படுத்துவது பொருத்தமானது என நாங்கள் வலியுறுத்துகிறோம்.



குறுகிய கால பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இந்த வழிமுறையின் கீழ் தற்போதுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர் நீங்கள் ஏற்கனவே கூறியதை போன்று புதிய அரசியலமைப்பை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதற்கிடைப்பட்ட காலத்தில் நாட்டிற்கு அரசமைப்பு திட்டம் ஒன்று தேவையில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தேசிய பிக்கு நிபுணர்கள் மன்றம் ஜனாதிபதிக்கு கடிதத்தில் தெரிவித்திருந்தது. இது மகாசங்கத்தின் நிலைப்பாட்டையும் பௌத்த சிங்கள பீடங்களின் இரட்டை முகத்தினையும் தெளிவுபடுத்தியிருக்கிறது. 



 



இந்த கடிதத்திற்கு ஜனாதிபதியின் கையெழுத்துடன் அதன் செயலகத்தினால் 26.04.22 அனுப்பிவைக்கப்பட்ட பதில் கடிதத்தில் மகாசங்கத்தினரிடம் மேலதிக ஆலோசனை வழங்குக என உங்கள் பாதங்களை வணங்கிக் கேட்கிறேன் என்றும், நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன், நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப்போன்று 20வது சீர்திருத்த சட்டத்தை நீக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஏதேனும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமாயின் எனது ஒத்துழைப்புக்களை வழங்குவதோடு அதை ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றம் இணைந்தே கொண்டுவர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.





அத்துடன் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வகட்சி மாநாட்டிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பிற்கும், அமைச்சுப் பதவிகளை ஏற்பதற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பிற்கும் சாதகமான பதில் கிடைக்காமை கவலையளிக்கிறது. எந்தச் சந்தர்ப்பத்திலும் உங்களால் முன்வைக்கப்பட்ட யோசனையை உதாசீனப்படுத்தவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு நெருக்கடியான அரசியற் சூழலை சுமுகமாக்குவதற்கும், பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் உங்களது ஆலோசனைகளையும், தலையீட்டையும் வழங்க வேண்டும் என்று உங்கள் பாதங்களை வணங்கி கோருகிறேன் என பதிலனுப்பப்பட்டிருந்தது. 



ஆர்ப்பாட்டக்காரர்களுடன் புத்த பிக்குகள் கலந்துகொண்டு நாம் உங்களுடன் நிற்கின்றோம் என்று சாட்டுப்போக்குக்கு எதிர்ப்பைக்காட்டிக்கொண்டு மறுபக்கம் கோட்டாபய ராஜபக்சவிற்கு மறைமுக ஆதரவு வழங்குவதனை அவ்வப்போது தனித்தனிய பௌத்த தேரர்கள் விடும் அறிக்கைகள் மூலம் உணரலாம். உதாரணமாக சம்பிக்க ரணவக்க, அத்துரலிய ரத்ன தேரர் முதலானவர்களைக் குறிப்பிடலாம்.



இது ஒரு பௌத்த பேரினவாதத்தின் தந்திரோபாயமாகும். ஒரு புறம் கடந்த 20 ஆம் திகதி 20 ஆவது சீர்திருத்த சட்டத்தை நீக்கி 19 வது சீர்திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும் இல்லாவிட்டால் சங்க ஆணையை பிறப்பிக்க வேண்டிவரும் என பௌத்த மகாசங்கம் அறிக்கை வெளியிட மறுபுறம் தேசிய பிக்கு நிபுணர்கள் மன்றம் துரித அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாம் இணங்கவில்லை எனவும் தெரிவித்திருந்ததுடன், 13 வது சீர்திருத்த சட்டம் பிரிவினை வாதத்தை தூண்டுவதாகவும், அதற்கு இடமளிக்க கூடாது என்றும் தற்போதைய நெருக்கடியான பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டதன் பின்னர் புதிய அரசமைப்புக்கு தீர்வு காணுமாறும் அதற்கு இடைப்பட்ட காலத்தில் அரசமைப்பு சீர்திருத்தம் தேவையில்லை என்றும் தெரிவித்திருந்தது தெரிந்ததே.





மேலும் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு கோட்டாபய ராஜபக்ச உடன்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மகாசங்க சபையின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்திருந்தார். இக்கருத்து தேசிய பிக்கு நிபுணர்கள் மன்றத்தின் கடிதத்துக்கு எதிர்மாறானவை.



அத்துடன் தேசிய பிக்கு நிபுணர்கள் மன்றத்தின் கடிதத்திற்கு பதிலளித்த ஜனாதிபதி நெருக்கடியான சூழ்நிலையில் சர்வகட்சி மாநாட்டினை கூட்டி முடிவெடுப்பதற்கு பிக்குகள் அம்மாநாட்டினை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கேட்கப்பட்டதனால் 28.04 22 திகதி மகாநாயக்க தேரர்களின் அறிக்கை வெளியாகியது. அதில் மகாநாயக்க தேரர்களின் தலைமையில் வரும் கிழமையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடாத்தி இடைக்கால அரசாங்கம் தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக தேசிய பிக்கு நிபுணர்கள் மன்றம் தெரிவித்துள்ளது. இது முதல் இவர்கள் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் இருந்தும் முரண்பட்டதாகும்.



 



அத்துடன் இது வரலாற்றில் டட்லி - செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டபோது நடந்த நிகழ்வை நினைவுபடுத்துகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் 1966 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட டட்லி - சொல்வா ஒப்பந்தப்படி 1966 இல் மாவட்ட சபை உருவாக்கப்பட வேண்டும் ஆனால் 1967 ஆம் ஆண்டாகியும் மாவட்ட சபை நிறைவேற்றப்படுவது குறித்து எந்தவிதமான அறிகுறிகளும் தென்படாதவிடத்து ஏமாற்றத்தை உணர்ந்த தந்தை செல்வா டட்லி சேனநாயக்கவிடம் அதுபற்றி தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்தபோது அப்போது மந்திரியாக இருந்த ஜே.ஆர் ஆங்கில பத்திரிகை ஒன்றினை அழைத்து மாவட்ட சபையை நிறுவுவதற்கு எதிராக எழுதுமாறு கூறினார். 





அந்தப்பத்திரிகையும் அவ்வாறே எழுத அதனைத்தொடர்ந்து சிங்களப்பத்திரிகையிலும் அச் செய்தியை வரவைத்துவிட்டு சிங்கள மக்கள் மாவட்டசபையை விரும்பவில்லை என பத்திரிகை செய்தியைக் காரணம் காட்டி மாவட்டசபையை நிறுவாது டட்லி - செல்வா ஒப்பந்தமும் கிழித்தெறியப்பட்டது. அதாவது டட்லி, ஜேஆர் மனதில் உள்ள தமிழருக்கு எதுவும் வழங்கக்கூடாது என்ற தமது நிலைப்பாட்டை பத்திரிகையில் செய்தியாக்கிவிட்டு ஒட்டுமொத்த சிங்கள மக்களின் நிலைப்பாடாக காட்டமுயன்று தந்தை செல்வாவை நம்பவைத்ததுபோலவே தற்போது இந்தப் பொருளாதார நெருக்கடியிலும், மகாசங்கம் தனது நிலைப்பாட்டை சிங்கள மக்கள்மீதே காட்டிய அதேவேளை 13 வது சீர்திருத்ததிற்கு எதிரான கருத்து மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக திரும்பியுள்ளது. இதற்கு பௌத்த மகாசங்கம் தாம் இரு வேறாகப் பிரிந்து நிற்கிறது பேன்ற நிலைப்பாட்டை மக்கள் மீது விதைத்து மகாவம்ச மனநிலையில் இருந்துதித்த சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்த முற்படுகிறது.



இது இப்படியிருக்க கண்டியிலிருந்து அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளும் சஜித் பிறேமதாசவை கண்டி தலதா மாளிகையில் அழைத்து பிரித் ஓதி ஆசீர்வதித்து ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு பகட்டு ஆதரவினை வழங்கியுமுள்ளது.



 



அதேபோல்தான் 13 வது அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் என சஜித் கூறிய நிலையில், 13 வது சீர்திருத்த சட்டத்திற்கு எதிரான கோசங்களுடன் குணதாச அமரசேகர , நளின் டி சில்வா போன்ற சிங்கள இனவாத சக்திகள் கிளம்பியிருப்பதானது. தேசிய பிக்கு நிபுணர்கள் மன்றம் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததை நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருக்கிறது. இது மகாசங்கமே உன்மையில் எழுதப்படாத யாப்பு என்பதை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது.





இன ஒற்றுமையை வலியுறுத்தி காலி முகத்திடலில் சிங்கள இளைஞர்கள் ஒன்றுதிரண்டு வருகின்ற சூழ்நிலையில் எழுந்திருக்கின்ற இந்த தமிழ் மக்களுக்கு எதிரான எதிர்ப்பு, தமிழர்களுக்கு எதிராக இப்போராட்டத்தை திசை திருப்புவதன் ஆரம்பப்புள்ளி எனலாம்.



ஆகக்குறைந்தது அரசியலமைப்பில்கூட தமிழர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மகாசங்கமும், சிங்கள பௌத்த இனவாத கும்பலும் திட்டமிட்ட முறையில் செயற்பட்டு வருகிறது. இதுதான் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.



 



அடிப்படையில் தமிழின அழிப்பு, இந்திய எதிர்ப்பு மனநிலையில் கட்டமைக்கப்பட்ட சிங்கள பௌத்த இனவாத சக்திகளிடம் தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் அரசியல் சிந்தனையிலாவது அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை அல்லது அவர்கள் அதற்கு தயாராக இல்லை. இந்த ஆபத்தான சூழ்நிலையை தமிழ் தலைவர்களும், தமிழ் மக்களும் இனியும் புரிந்து கொள்ளாதவிடத்தும், இவ்வாறான பௌத்த சிங்கள பேரினவாத சக்திகளின் சிந்தனை மாறாதவிடத்தும் எத்தனை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றும் பயனில்லை. அரசியல் தீர்வின்றி நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வு முடியாது.









கோட்டா கோ கமவும் மே பதினெட்டும்


 




Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை