Skip to main content

இலங்கையின் எதிர்மறையான வரலாற்றுச் சாதனை

Mar 12, 2022 88 views Posted By : YarlSri TV
Image

இலங்கையின் எதிர்மறையான வரலாற்றுச் சாதனை 

எமது ஆட்சியாளர்கள் அவ்வப்போது இறைமை, தன்னாதிக்கம்,  ஆள்புல ஒருமைப்பாடு, சுயாதீனம், சுதந்திரம் மிக்க குடியரசு நாடாக நமது நாட்டை வியாக்கியானப்படுத்துகிறார்கள், மார்தட்டிக்கொள்கின்றார்கள்.



ஆனால் நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில் இறக்குமதிகளைச் செய்வதற்கான டொலருக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.



அமெரிக்க டொலரைக் கடனாகப் பெறுவதற்கு நிதியமைச்சர் படாதபாடுபடுகின்றார். இறக்குமதி செய்ய வேண்டிய பெற்றோலியம், பால்மா, பருப்பு போன்ற முக்கியமான பொருட்களையே இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.



ரூபாவின் பெறுமதி வரலாற்றில் ஒரு போதும் இல்லாதவாறு டொலரோடு ஒப்பிடுகையில் 260 ரூபாவாக அதிகரித்ததையால், ரூபாவின் பெறுமதி மிகவும் குறைந்துள்ளது.



அதுவும் நாளொரு வண்ணமும் ரூபாவின் பெறுமதி தாழ்ந்து கொண்டு செல்கின்றது. எனவே இலங்கை ரூபாய் என்பது நிலையற்ற பெறுமதியுடையதாகவும் எதிர்மறையை நோக்கித் தேய்வதாகவும் காணப்படுகிறது.



தற்போதைய நிலையில் அரசாங்கமே நமது உள்நாட்டு நாணயத்தை மதிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. டொலர் என்பது காசுக் கடவுளின் காணிக்கையாகப் பார்க்கப்படுகிறது .காசுக்கடவுளாக அமெரிக்கா நம்மவர்களுக்குத் தெரிகிறது.



அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு எதிராக வீறாப்புப் பேசிய அதிரடி ஆட்சியாளர்கள் சிலர் அடங்கிப் போய் விட்டனர். இந்த நிலையில் நிதியமைச்சர் அவர்கள் அமைரிக்கா சார்பான நிலைப்பாட்டை எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றார்.



மீள்பிறப்பாக்க யுகதனவியத்திட்டத்தில் 41 வீதமான பங்கு அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக டொலரைத் தேடலாம் என்று நிதியமைச்சர் நினைத்துச் செயல்படுகிறார்.



ஆனால் அமைச்சர்களாக இருந்த விமல், கம்மன்பில, வாசுதேவ போன்றவர்கள் யுக தனவிய அமெரிக்க முதலீட்டுக்கு எதிராக உயர்நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெறவில்லை.



இப்படியான நிலைமையில் ரூபாவின் பெறுமதி இறக்கத்தாலும் டொலரின் பெறுமதி ஏற்றத்தாலும் நாடு பொருளாதாரத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இறக்குமதிப் பொருட்களுக்கு ரூபாய்களை அரசு கொடுக்க முடியாது.



டொலர்களையே செலுத்த வேண்டும். இதனால் இருபது வீதமான உயர்தர முதலாளித்துவ வர்க்கத்தினர் சுகபோகமாக வாழ்ந்தாலும் 80 வீதமான தொழிலாளர், நடுத்தர வர்க்கத்தினர் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.



இலங்கையின் பணவீக்கம் 16.8 ஆக அதிகரித்துள்ளது.அதேவேளை வங்காள தேசத்தின் பணவீக்கம் ஆக 5.9 ஆகத்தான் உள்ளது. அங்குந்தான் கோவிட் தாக்கம் இருந்தது, அங்குள்ள நிதி முகாமை எமது நாட்டை விட 3 மடங்கு நன்றாக உள்ளதா? என்று எண்ணத் தோன்றுகின்றது.



புதிய நிதியமைச்சர் வந்தால் எல்லாம் வெற்றியாகி விடும் என்றார்கள். அலாவுதீனின் அற்புத விளக்குடன் வருகிறார் என்றார்கள். 7 ஆவது அறிவும் உடையவர் என்றார்கள், எல்லாம் புஷ்வாணமாகிவிட்டது. பொருளாதாரம் அதல விதல சுதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறது.



ரூபாயின் பெறுமதி எதிர்மறையாக வரலாறு படைத்துள்ளது.டொலரின் தட்டுப்பாடு,அடிக்கடி அதிகளவில் எரிபொருள் விலையேற்றம், அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களும் விலையேற்றம், மக்களுக்கு வருவாய் இல்லை,பொருட்கள் தட்டுப்பாடு, மீண்டும் 367 பொருட்களுக்கு இறக்குமதித்தடை இப்படி நாட்டின் நிலை மோசமாகி விட்டது.



இன்னும் மோசமாகக்கூடிய நிலைமைதான் உள்ளது. எல்லாம் ஆட்சியதிகாரரின் கைகளை மீறித்தான் செல்கிறது.ஆட்சியரின் கையில் இருப்பது தீர்க்கப்படாத பிரச்சினைகள் மட்டுமே தான்.



இனப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்படும் பிரச்சினை, சிவில் நிருவாகம் இராணுவமயமாதல் பிரச்சினை, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்று கூறிக் கொண்டே போகலாம்.



மொத்தத்தில் இருந்த பிரச்சினைகள் அப்படியே இருக்க புதிய புதிய பிரச்சினைகள் முளைவிட்டுக் கிளைவிட்டு அதிகரிக்கின்றன. தலையிடிக்கு மருந்தாகத் தலையணைகளை மாற்றுவது போல் அமைச்சர்கள் பதவி மாற்றங்கள் செய்யப்படுகின்றார்கள்.



எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படுவதாக இல்லை. இனவாதம் மதவாதம் அத்துடன் பணம், ஊழல் மோசடிகளால் தேர்தல்களை வென்றுவிடலாம் என்றுதான் அதிகாரர்கள் நினைகின்றார்கள். மாற்றங்கள் எதுவும் இல்லை.ஏமாற்றங்கள் தாராளமாய் உண்டு.



பணம் பாதாளம்வரை பாயும் என்பார்கள்.எங்கள் பண ரூபாய் உறுதித்தன்மை இல்லாமல் தள்ளாடுகிறது. நாட்டையும் அது தள்ளாட வைக்கிறது.



அதிகார வர்க்க ஆட்சியாளர்களின் சாதனை என்பது எதிர்மறைகளாகவே உள்ளளன. ரூபாவின் பெறுமதி இறக்கம், பண வீக்கம்,பெற்றோலிய விலையேற்றம், இறக்குமதித் தடைப்பொருட்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, பொருட்களின் விலையேற்றம் போன்றவையே எதிர்மறைச் சாதனைகளாகவுள்ளன.



ஆள முடியாத நிலையில் ஆட்சியாளர்கள், வாழ முடியாத நிலையில் மக்கள் என்ற நிலை நம் நாட்டில் உருவாகி வருகின்றது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை