Skip to main content

அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலுக்கு விரைவில் அறிவிப்பு: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தீவிரம்!

Nov 05, 2021 177 views Posted By : YarlSri TV
Image

அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலுக்கு விரைவில் அறிவிப்பு: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தீவிரம்! 

அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும்.2014-ம் ஆண்டு ஜெயலலிதா இருந்த போது அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை நடத்தினார். அதன் பிறகு 2019-ம் ஆண்டு உள்கட்சி தேர்தலை நடத்தி இருக்க வேண்டும்.



அப்போது கொரோனா பரவிய காலமாக இருந்ததால் உள்கட்சி தேர்தல் அ.தி.மு.க.வில் நடைபெறவில்லை. அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை நடத்த முயற்சி செய்யும் போதெல்லாம் ஒவ்வொரு பிரச்சனை தலைதூக்க ஆரம்பித்தது.



சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சிமன்ற தேர்தல், கொரோனா காலகட்ட ஊரடங்கு, அ.தி.மு.க.வில் ஏற்பட்ட சலசலப்பு என பல்வேறு வி‌ஷயங்கள் காரணமாக உள்கட்சி தேர்தல் நடைபெறுவது காலதாமதமாகிக் கொண்டே சென்றது.



இந்தநிலையில் உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வருகிற டிசம்பர் 31-ந்தேதிக்குள் உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.



அதன் அடிப்படையில் உள்கட்சி தேர்தலை நடத்த அ.தி.மு.க.வில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட தி.மு.க. அரசு தவறிவிட்டதாகக் கூறி தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வருகிற 9-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.



இந்த ஆர்பாட்ட நிகழ்ச்சி முடிந்ததும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தி உள்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிட உள்ளனர்.



இது குறித்து அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-



அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை டிசம்பர் 31-ந் தேதிக்குள் நடத்துவதற்கு கோர்ட்டு கெடு விதித்துள்ளதால் இந்த மாதம் உள்கட்சி தேர்தலை நடத்த தலைமை கழகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகும்.



அ.தி.மு.க. கிளை கழக தேர்தல் முதலில் நடத்தப்படும். அதன் பிறகு ஒன்றிய கழகம், பேரூர், நகர கழகம், மாவட்டம் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். இறுதியாக தலைமைக்கு தேர்தல் வரும்.



இந்த வி‌ஷயத்தில் சசிகலாவுக்கு அ.தி.மு.க.வில் இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்று கூறி இருந்தார்.



இவர்கள் இருவரும் சொன்ன கருத்தால் அ.தி.மு.க.வில் ஆளாளுக்கு பேட்டி கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். இப்போது இந்த வி‌ஷயத்தை விவாதப்பொருளாக ஆக்கக் கூடாது என்பதற்காக தனிப்பட்ட முறையில் யாரும் பேட்டி கொடுக்கக் கூடாது என்று தலைமை அறிவுறுத்தி உள்ளது.



அதனால் சசிகலா விவகாரத்தில் இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் உள்ளது. இந்த சூழலில் உள்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது.



கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவும் கூட்டப்பட வேண்டும். இவை அனைத்தும் டிசம்பர் மாதத்துக்குள் நடத்த முடிவு செய்ய வேண்டும் என்பதால் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தலைமைக் கழகத்திற்கு வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.



அ.தி.மு.க. பொதுக்குழு வருடத்திற்கு ஒருமுறையும், செயற்குழு 2 முறையும் நடத்தப்பட வேண்டும். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு (2020) அ.தி.மு.க. பொதுக்குழு நடத்தப்படவில்லை. தேர்தல் கமி‌ஷனில் கால அவகாசம் கேட்கப்பட்டு இருந்தது.



எனவே வருகிற டிசம்பர் 31-ந்தேதிக்குள் பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும். அதற்கு முன்னதாக உள்கட்சி தேர்தலையும் நடத்த வேண்டும். இதனால் வருகிற 10-ந்தேதிக்கு பிறகு அ.தி.மு.க.வில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

 



இவ்வாறு அவர் கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை